அகதிகள் முகாம் மீது தாக்குதல்

டெல் அவிவ்: நவ.1- இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடங்கி 26 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் நேற்று (செவ்வாய்) காசாவின் ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் முக்கிய கமாண்டர் இப்ரஹிம் பியாரி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை உறுதி செய்துள்ளது. இந்நிலையில் காசாவில் இன அழிப்பு நடப்பதாகவும் அதனைத் தடுக்க ஐ.நா. தவறிவிட்டதாகவும் கூறி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தின் (Office of the United Nations High Commissioner for Human Rights, OHCHR) இயக்குநர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முக்கிய மூளையாக செயல்பட்ட ஹமாஸ் மத்தியப் பிரிவு கமாண்டர் இப்ரஹிம் பியாரியுடன் சேர்த்து நிறைய ஹமாஸ் தீவிரவாதிகளும் கொல்லப்பட்டதாக வீழ்த்தப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை உறுதி செய்துள்ளது.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தெற்குப் பகுதிக்குச் செல்லுமாறு எக்ஸ் தளம் வாயிலாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
ஜபாலியா முகாம் மீதான தாக்குதல் குறித்து இஸ்ரேல் பாதுகாப்புப் படை செய்தித் தொடர்பாளர் லெஃப்டினண்ட் கர்னல் ஜொனாத்தன் கான்ரிக்கஸ் கூறுகையில், “பியாரியை வீழ்த்தியது மிகவும் முக்கியமானது. அதே வேளையில் பக்கவாட்டு சேதாரமாக பொதுமக்களும் உயிரிழக்க நேர்கிறது.
நேற்றைய தாக்குதலில் பியாரி உள்பட 50 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பலர் தீவிரவாதிகள். பக்கவாட்டு சேதாரத்தை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன” என்றார்.