Home மாவட்டங்கள் பெங்களூர் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

நெல்லை :ஜூன். 30- நேற்று விடுமுறை தினம் என்பதால் அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்துடன் உற்சாகத்துடன் குளித்து வருகின்றனர்.
பாபநாசம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற அருவிகளில் ஒன்றாக அகஸ்தியர் அருவி விளங்குகிறது. இந்த அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டுவதால் நெல்லை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தந்து குளித்து மகிழ்வர்.
இந்நிலையில் குற்றாலத்தில் சீசன் களைகட்டியுள்ளதால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் பலரும் பாபநாசம் அகஸ்தியர் அருவியை நோக்கி படையெடுத்தனர். அகஸ்தியர் அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் அவர்கள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந் தனர்.
ஐகோர்ட் உத்தரவின் பேரில் அம்பை சட்டமன்ற தொகுதிக்கு மக்கள் அகஸ்தியர் அருவியில் குளிப்பதற்கு இலவசமாக அனுமதிக்கப்படுகின்றனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் உள்ளூர் மக்களும் பலர் குளிப்பதற்காக வந்திருந்தனர். அவர்கள் பாபநாசம் சோதனை சாவடியில் தங்களது ஆதார் அட்டை நகலை காட்டிய பிறகு குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் அகஸ்தியர் அருவி பகுதியில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பொதுமக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. அகஸ்தியர் அருவிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களை பாபநாசம் சோதனைச் சாவடியில் வனச்சரகர் குணசீலன் அறிவுறுத்தலின் படி வனத்துறையினர் தீவிரமாக சோதனை செய்த பிறகே அனுமதித்தனர்.
அப்போது சிலர் கொண்டு வந்த பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மது பாட்டில்களை பறிமுதல் செய்து அழித்தனர். அருவிப்பகுதியில் சுற்றுலா பயணிகள் சோப்பு, ஷாம்பு போட்டு குளிக்காத வண்ணம் வனத்துறை ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Exit mobile version