அகில இந்திய காவல்துறை மாநாடு – மோடி பங்கேற்பு

புதுடெல்லி:ஜனவரி. 21 – டெல்லியில் உள்ள தேசிய வேளாண் அறிவியல் வளாகத்தில் அகில இந்திய காவல்துறை தலைவர்கள் (டி.ஜி.பி./ஐ.ஜி.பி.) மாநாடு ஜனவரி 20-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 21, 22 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3 நாள் மாநாடு நேரடி மற்றும் காணொலி என இருவகைகளிலும் நடைபெறுகிறது. பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த காவல்துறை தலைவர்கள், மத்திய ஆயுதப்படைகளின் தலைவர்கள், மத்திய காவல் அமைப்புகளின் தலைவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டில் நேரடியாக பங்கேற்கின்றனர். மற்றவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து காணொலி வாயிலாக கலந்துகொள்கின்றனர். இணையதளக் குற்றங்கள், காவல்துறையின் தொழில்நுட்பம், தீவிரவாத எதிர்ப்பில் உள்ள சவால்கள், திறன் கட்டமைப்பு, சிறை சீர்திருத்தம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக இந்த மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்படுகிறது.