அக்னிபத் திட்டத்தில் ஆள்சேர்ப்பு: இடைத்தரகருக்கு இடமில்லை

அவிநாசி , ‘செப். 21-
அக்னிபத்’ திட்டத்தில் ராணுவத்துக்கான ஆள்சேர்ப்பு முகாமில் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என, ராணுவம் எச்சரித்துள்ளது.
‘அக்னிபத்’ திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கு ஆள்சேர்க்கும் மண்டல அளவிலான முகாம், திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே பழங்கரையிலுள்ள ‘டீ’ பப்ளிக் பள்ளியில் நடக்கிறது. இதில், கோவை, திண்டுக்கல், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்று வருகின்றனர்.நேற்று, திண்டுக்கல் மற்றும் தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணிக்கு துவங்கி, அதிகாலை வரையிலான உடல் தகுதி தேர்வில், ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
ராணுவம் சார்பில், ‘ராணுவ ஆள் சேர்ப்பு இலவச சேவையாகும். யாருக்கும் பணம் கொடுக்க வேண்டாம். தகுதி, திறமை அடிப்படையில் தான் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். சமூக விரோதிகள்,
இடைத்தரகர்கள் விரிக்கும் வலையில் விழ வேண்டாம். ராணுவத்தில் சேர ஏதாவது தகவல் தேவைப்பட்டால் ஆள்சேர்ப்பு அலுவலகத்தை அணுக வேண்டும்’ என, முகாம் வளாகத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்களுக்கு, ஆள்தேர்வு நடக்கும் இடம், தேதி குறித்து முன்கூட்டியே கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. முகாமில், உடல் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. அதில் தேர்வு செய்யப்படுவோருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இதில், தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு, கோவையில் எழுத்து தேர்வு நடத்தப்படும். தேர்வு செய்யப்படுவோர் குறித்த விபரம், ராணுவ இணைய தளத்தில் வெளியிடப்படும். அதன்பின், அவர்கள் அந்தந்த ராணுவ பயிற்சி மையங்களுக்கு அழைக்கப்படுவர்.