அக்.1 முதல் மாநகராட்சி தூய்மைஇயக்கப் பணி தொடக்கம்

பெங்களூரு, செப். 28: அக்.1 முதல் பிபிஎம்பியின் தூய்மை இயக்கப் பணி தொடங்க உள்ளது.‘ஸ்வச்சதா ஹி சேவா’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, பெங்களூரு மாநகராட்சியின் (பிபிஎம்பி) திடக்கழிவு மேலாண்மை (SWM) பிரிவு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஒவ்வொரு வார்டிலும் குறைந்தது இரண்டு இடங்களில் தூய்மை இயக்கப் பணி தொடங்க உள்ளது.
பிபிஎம்பி மாந‌கரத்தை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் பெங்களூரின் புகழை மீண்டும் கார்டன் சிட்டியாக மீட்டெடுக்க, தங்கள் சுற்றுப்புறங்களை தூய்மையான மற்றும் பசுமையான நிலையில் பராமரிப்பதன் முக்கியத்துவம் குறித்து குடிமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளது.பிபிஎம்பியின் அறிக்கையின்படி, இந்த இயக்கப் பணியில் கழிவுக் கிடங்குகள், குப்பைகள், நீர்நிலைகளுக்கு அருகிலுள்ள பகுதிகள், குப்பைகள் குவிவதற்கு வாய்ப்புள்ள பகுதிகள், ரயில் பாதைகள், சாலையோரப் பகுதிகள், பாலங்கள் மற்றும் மேம்பாலங்களுக்கு அடியில் உள்ள இடங்கள், குடிசைப்பகுதிகள், சந்தைகள், வழிபாட்டுத் தலங்கள், சுற்றுலா தலங்கள், பேருந்து நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் சுகாதார நிறுவனங்கள் ஆகியவை அடங்கும்.வளர்ந்து வரும் பெங்களூரில் அண்மைக்காலமாக மாசுவும், குப்பையும் அதிகரித்து வருவதாக பொதுமக்களிடையே புகார்கள் எழுந்துள்ளன. இதனைக் கருத்தில் கொண்டு, மாநகரை பசுமையாகவும், தூய்மையாகவும் வைக்க பிபிஎம்பி இந்த திட்டத்தை தொடங்க உள்ளது. அழகான பசுமையைக் கொண்டிருந்த பெங்களூரை, மீண்டும் பொலிவு அடைய செய்ய வேண்டும் என்பதே பலரின் நோக்கமாக உள்ளது.