அக்.24 வரை கனமழை பெய்யும் வானிலை மையம் எச்சரிக்கை

பெங்களூரு, அக். 19: பெங்களூரு உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அக்.24‍ ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
பெங்களூரு உள்ளிட்ட மாநிலத்தின் 14க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கன மழை பெய்ய உள்ளது. மேலும் அந்தந்த மாவட்டங்களில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
மைசூரு, குடகு மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனத் தெரிகிறது. மாலையில் கனமழை பெய்யும் என்பதால் அந்த மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கைஅறிவிக்கப்பட்டுள்ளது. உடுப்பி, யல்லாபூர்,கோகர்ணா, உத்தர கன்னடம், மங்களூரு, தர்மஸ்தலா, புத்தூர், கொல்லூர் ஆகிய பகுதிகளிலும் கன‌ மழை பெய்ய வாய்ப்புள்ளது.
பெங்களூரிலும் கன மழை பெய்ய உள்ளது. இன்று மாலை அல்லது இரவில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சில பகுதிகளில் மேகமூட்டமான வானிலையும் கணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் பருவமழை நன்றாக பெய்து வருகிறது. அக். 24 ஆம் தேதி வரை மழை பெய்யும் என்று தெரிகிறது. மாநிலத்தில் பல இடங்களில் வறட்சி நிலவி வரும் நிலையில் மழை வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாக உள்ளது.அக்டோபர் மாதம் முழுவதும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவராத்திரியின் கடைசி நாளில் மழை பெய்யும் என்று தெரிகிறது.