அசல் சிவசேனா யார் என்பதை மக்கள் சொல்வார்கள்” – உத்தவ் தாக்கரே

மும்பை: அக். 25- தேர்தலை நடத்துங்கள்; அசல் சிவ சேனா யார் என்பதை மக்கள் சொல்வார்கள் என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இதனை மகாராஷ்டிர மாநில முதல்வர் ஏக்னாத் ஷிண்டேவுக்கு சவாலாக அவர் விடுத்துள்ளார்.சிவ சேனா கட்சி இரண்டாக உடைந்து ஏக்னாத் ஷிண்டே ஒரு அணியாகவும், உத்தவ் தாக்கரே ஒரு அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர். ஏக்னாத் ஷிண்டே தலைமையிலான அணியினர் பாஜகவுடன் கூட்டணி அமைத்து மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்துள்ளனர். ஏக்னாத் ஷிண்டே முதல்வராக இருந்து வருகிறார். இந்நிலையில், இதனை உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.“சட்டப்பேரவை உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடினோம். இது தொடர்பான முடிவு உரிய நேரத்தில் எடுக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்தார். இப்போது நான் என்ன சொல்கிறேன் என்றால் இதை மறந்து விடுவோம். தேர்தலை நடத்துங்கள். அதில் அசல் சிவ சேனா யார் என்பதை மக்கள் தங்களது வாக்குகளின் மூலம் சொல்வார்கள். உங்களுக்கு சக்தி இருந்தால் தேர்தலை நடத்துங்கள். இதனை நான் சவாலாக தெரிவிக்கிறேன்.
உள்ளாட்சி, சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தலை நடத்துங்கள். நாங்கள் தான் ஆட்சி அமைப்போம். எங்களது சக்தியை உங்களுக்கு அதன் மூலம் சொல்வோம்” என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மும்பையின் சிவாஜி மகாராஜ் பூங்காவில் நடைபெற்ற தசரா விழாவில் அவர் இதனை சொல்லி இருந்தார்.