அசுர வளர்ச்சியில் இந்திய மெட்ரோ ரயில்

டெல்லி, ஜூன் 22- ஒரு நாட்டில் போக்குவரத்து எந்த அளவுக்கு முன்னேறுகிறதோ அந்த அளவுக்கு தொழில்களும் , வேலைவாய்ப்புகளும் முன்னேறும். பொருட்கள் போக்குவரத்தில் தொடங்கி மனிதர்கள் போக்குவரத்து வரை எளிதாக்க நமது வளர்ச்சி அதிகரிக்கும் என்பது தான் வரலாறு. அந்த வகையில் ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளை பார்க்கும் போது நமக்கு பிரமிப்பை தரக்கூடியவை அங்கே இருக்கும் போக்குவரத்து திட்டங்கள். குறிப்பாக மெட்ரோ ரயில் திட்டங்கள். மெட்ரோ ரயில் திட்டங்கள் போக்குவரத்து நேரத்தை குறைக்கவும், போக்குவரத்து நெரிசல்களை கட்டுப்படுத்தவும் பேருதவியாக இருக்கின்றன. அந்த வகையில் இந்தியாவின் பிரதான நகரங்களில், மெட்ரோ ரயில் திட்டங்கள் வேகமாக செயல்படுத்தப்படுகின்றன. மக்கள் தொகை அதிகரிப்பு நகர விரிவாக்கம் ஆகியவற்றுக்கு ஏற்ப அடுத்தடுத்த கட்ட மெட்ரோ பாதைகளும் போடப்பட்டு வருகின்றன. 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் ஓராண்டுக்கு 20 கிலோமீட்டர் மெட்ரோ ரயில்பாதைகள் கட்டப்பட்டன. அது தற்போது ஓராண்டுக்கு 80 கிலோமீட்டர் என உயர்ந்துள்ளது. விரைவில் இது ஓராண்டுக்கு 120 கிலோமீட்டர் என்பதை அடையும் என டாடா புராஜெக்ட்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி வினாயக் பாய் கூறியுள்ளார். சர்வதேச அளவில் பார்க்கும் போது , உலகம் முழுவதும் உள்ள மெட்ரோ பாதைகளில் ஒவ்வொரு 100 கிலோமீட்டரிலும் 45 கிலோமீட்டர் சீனாவில் உள்ளது. சர்வதேச அளவில் ஒவ்வொரு 100 கிலோமீட்டர் மெட்ரோ ரயில் பாதையிலும் 65 கிலோ மீட்டர் பாதைகள் சீன நிறுவனங்களால் கட்டமைக்கப்பட்டவை. இந்தியாவை சீனாவுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது ஒவ்வொரு 100 கிலோ மீட்டரிலும் 5 கிலோ மீட்டர் மெட்ரோ பாதைகள் இந்திய நிறுவனங்களால் கட்டப்பட்டவை. சீன நிறுவனங்கள் இந்தியாவை விட 13 மடங்கு அதிகமான மெட்ரோ ரயில் பாதைகளை கட்டமைத்துள்ளன. சீனாவின் மெட்ரோ ரயில் நெட்வொர்க் என்பது அமெரிக்காவை விட ஆறு மடங்கு பெரியது , இந்தியாவை விட 11 மடங்கு பெரியது, கனடா நாட்டை விட 40 மடங்கு பெரியது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சீனா கடந்த 25 ஆண்டுகளில் தான் இவ்வளவு பெரிய மெட்ரோ ரயில் நெட்வொர்க்கை கட்டி முடித்துள்ளது. சீனா மெட்ரோ திட்டங்கள் என்பது மிகப் பெரியவை. அதாவது உலகிலேயே மிகப்பெரிய மெட்ரோ ரயில் நெட்வொர்க்கை கொண்டுள்ளது. உலக அளவில் மிகப்பெரிய மெட்ரோ ரயில் நெட்வொர்க்கை கொண்டு இருக்கக்கூடிய முதல் 10 நகரங்களில் 9 நகரங்கள் சீனாவில் தான் இருக்கின்றன. மெட்ரோ ரயில் திட்டங்கள் சீனாவில் நகர்ப்புறங்களில் மக்கள் தொகை அதிகரிப்பதை குறைத்தது, நகர்ப்புறங்களோடு மற்ற பகுதிகளுக்கும் இடையிலான போக்குவரத்து என்பது பாதுகாப்பானதாக மாற்றப்பட்டுள்ளது. பல்வேறு தொழில்கள், முதலீடுகள் அதிகரித்ததன் மூலமாக பல லட்சம் வேலை வாய்ப்புகளும் உருவாகியுள்ளன. அதுமட்டுமின்றி சிறந்த மெட்ரோ நெட்வொர்க் இருப்பது என்பது ஒரு நாட்டின் சுற்றுலா துறைக்கு மிக முக்கிய பங்காற்றுகிறது. குறிப்பாக விமான நிலையங்களுடன் மெட்ரோ ரயில் பாதை தொடர்பு என்பது குறிப்பிட்ட பகுதிகளை நோக்கி சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது.எனவே நமது நகரங்கள் மேம்பட மேம்பட மெட்ரோ பாதைகளை எண்ணிக்கையும் நாம் விரிவுபடுத்த வேண்டியது கட்டாயம் ஆகியுள்ளது.