Home Front Page News அஜித்குமார் – அரசு மருத்துவர் அதிர்ச்சி தகவல்

அஜித்குமார் – அரசு மருத்துவர் அதிர்ச்சி தகவல்

சிவகங்கை: ஜூலை 5 –
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்கு​மார் உயிரிழந்​துவிட்​டார் என்று திருப்புவனம் அரசு மருத்துவமனையில் உறுதிப்படுத்திய பிறகும், அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பாமல், உயர் அதிகாரிகள் சொன்ன​தாக கூறி, போலீஸார் தங்கள் வாகனத்தில் எடுத்து சென்றனர் என்று மதுரை மாவட்ட நீதிபதியிடம் அரசு மருத்துவர் சாட்சி​யம் அளித்துள்ளார்.
இதுகுறித்து மதுரை மாவட்ட 4-வது நீதி​மன்ற நீதிபதி ஜான் சுந்​தர்​லால் சுரேஷ் விசா​ரணை நடத்​தி, அறிக்கை தாக்​கல் செய்​யு​மாறு உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு உத்​தர​விட்​டது.
இதை தொடர்ந்​து, மாவட்ட நீதிபதி ஜான் சுந்​தர்​லால் சுரேஷ் கடந்த 2-ம் தேதி திருப்​புவனம் காவல் நிலை​யம் அருகே உள்ள நெடுஞ்​சாலைத் துறை ஆய்வு மாளி​கை​யில் தங்​கி, விசா​ரணையை தொடங்​கி​னார். அன்​றைய தினம் சிவகங்கை ஏடிஎஸ்பி சுகு​மாறன், திருப்​புவனம் காவல் ஆய்​வாளர் ரமேஷ்கு​மார் ஆகியோர், வழக்கு தொடர்​பான ஆவணங்​களை நீதிப​தி​யிடம் ஒப்​படைத்​தனர். தொடர்ந்​து, கோயில் பணி​யாளர்​கள், ஆட்டோ ஓட்​டுநர் உட்பட பலரிடம் 12 மணி நேரத்​துக்​கும் மேலாக நீதிபதி விசா​ரணை நடத்​தி​னார்.
2-வது நாளில் (ஜூலை 3) கோயில் பணி​யாளர்​கள் உள்ளிட்டோரிடம் நீதிபதி விசா​ணை நடத்​தி​னார். அஜித்​கு​மாரின் தாய் மால​தி, சகோ​தரர் நவீன்கு​மார் வாக்​குமூலம் அளித்​தனர்.இந்​நிலை​யில், 3-வது நாள் விசாரணை நேற்று நடந்தது. நீதிபதி ஜான் சுந்​தர்​ லால் சுரேஷ் காலை 8.45 மணி அளவில் விசா​ரணையை தொடங்​கி​னார். திருப்​புவனம் அரசு மருத்​து​வ​மனை​யில் சம்பவ நாளன்று பணி​யில் இருந்த மருத்​து​வர் கார்த்​தி​கேயன், அஜித்​கு​மாரை போலீ​ஸார் ஏற்​றிச் சென்ற ஆட்டோ ஓட்​டுநர் அய்​ய​னார், மடப்​புரம் காளிகோயில் முன்பு பழக்​கடை நடத்​தும் வியா​பாரி​கள், திருப்​புவனம் காவல் நிலைய சிறப்பு எஸ்​.ஐ. சிவக்​கு​மார், அஜித்​கு​மார் உடலை பிரேதப் பரிசோதனை செய்த மதுரை அரசு மருத்​து​வ​மனை மருத்​து​வர்​கள் சதாசிவம், ஏஞ்​சல் ஆகியோரிடம் நீதிபதி விசா​ரணை நடத்​தி​னார்.
அஜித்​கு​மாரை முதலில் திருப்​புவனம் அரசு மருத்​து​வ​மனைக்​கு​தான் போலீ​ஸார் கொண்டு சென்​றுள்​ளனர். அங்கு பரிசோ​தித்​து, அவர் உயி​ரிழந்​து​விட்​ட​தாக மருத்​து​வர் உறு​திப்​படுத்​தி​யுள்​ளார். ஆனாலும்,பிரேத பரிசோதனைக்கு அனுப்​பாமல், உடலை போலீ​ஸார் எடுத்​துச் சென்​றுள்​ளனர். இந்த தகவலை மாவட்ட நீதிப​தி​யிடம் திருப்​புவனம் அரசு மருத்​து​வ​மனை மருத்​து​வர் கார்த்​தி​கேயன் நேற்று சாட்​சி​ய​மாக தெரி​வித்​துள்​ளார்.
இதுகுறித்து செய்​தி​யாளர்​களிடம் அரசு மருத்​து​வர் கார்த்​தி​கேயன் கூறிய​தாவது: ஜூன் 28-ம் தேதி மாலை 6.35 மணிக்கு திருப்​புவனம் அரசு மருத்​து​வ​மனைக்கு ஆட்​டோ​வில் அஜித்​கு​மாரை போலீ​ஸார் கொண்டு வந்​தனர். நான் பரிசோ​தித்​த​போது, அவர் ஏற்​கெனவே உயி​ரிழந்​து​விட்​டார் என்பதை அறிந்​து, போலீ​ஸாரிடம் தெரி​வித்தேன். பின்​னர், உடலை பிரேதப் பரிசோதனை அறை​யில் வைக்​கு​மாறு கூறினேன். ஆனால், தனிப்​படை ​போலீ​ஸார், உயர்அதி​காரி​கள் சொன்​ன​தாக கூறி, உடலைஅவர்​களது வாக​னத்​தில் எடுத்​துச் சென்​றனர். இதை நீதிப​தி​யிடம் தெரி​வித்தேன்.இவ்​வாறு அவர் கூறி​னார்.
மடப்​புரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்​டுநர் அய்​ய​னார் கூறும்​போது, ‘‘எனது ஆட்​டோ​வில்​தான் போலீ​ஸார் அஜித்​கு​மாரை ஏற்​றி, திருப்​புவனம் அரசு மருத்​து​வ​மனைக்கு கொண்​டு​சென்​றனர். அஜித்​கு​மாரை 4 போலீ​ஸார் தூக்கி வந்​தனர். அப்​போது அவரது உடலில் எந்த அசை​வும் இல்​லை. கண்​கள் மூடி இருந்​தன. அவர் உயி​ரிழந்​து​விட்​ட​தாக போலீ​ஸாரும் பேசிக் கொண்​டனர். இதை நீதிப​தி​யிடம் தெரி​வித்​தேன்’’ என்​றார்.
தனிப்​படை போலீ​ஸார் கொடூர​மாக தாக்​கிய​தில் விசா​ரணை​யின்​போதே அஜித்​கு​மார் உயி​ரிழந்​துள்​ளார். ஆனால், போலீ​ஸார் அதை மறைக்​கும் வித​மாக, ‘‘நாங்​கள் விசா​ரிக்​கும்​போது, அஜித்​கு​மார் தப்​பியோட முயன்று கீழே விழுந்​து​விட்​டார். அப்​போது அவருக்கு வலிப்பு ஏற்​பட்​ட​தால், ஆட்​டோ​வில் திருப்​புவனம் அரசு மருத்​து​வ​மனைக்​கும், அங்​கிருந்து சிவகங்கை தனி​யார் மருத்​து​வ​மனைக்​கும் கொண்டு சென்​றோம். பின்​னர் மதுரை தனி​யார் மருத்​து​வ​மனைக்கு கொண்டு சென்​ற​போது, அவர் இறந்​து​விட்​ட​தாக மருத்​து​வர்​கள் உறுதி செய்​தனர்’’ என்று ஆரம்​பத்​தில் கூறி​யிருந்​தனர். இந்த நிலை​யில், முதலில் திருப்​புவனம் அரசு மருத்​து​வ​மனைக்கு கொண்டு வந்​த​போதே, அஜித்​கு​மார் உயி​ரிழந்​து​விட்​டார் என்​பது தற்​போது அரசு மருத்​து​வரின் சாட்​சி​யம் மூலம் உறுதியாகியுள்ளது.

Exit mobile version