அஜித் பவாருக்கு 4 தொகுதி: மகாராஷ்டிராவில் பாஜக உடன்பாடு

புதுடெல்லி, மார்ச் 14 – மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 48 மக்களவை தொகுதிகளுக்கான கூட்டணி பங்கீட்டில் பாஜக, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா மற்றும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) ஆகியவற்றுக்கிடையே பலநாட்களாக முட்டுக்கட்டை நிலவி வந்தது. தற்போது தொகுதி பங்கீட்டில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அஜித் பவார் கட்சி போட்டியிடும் 4 இடங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, பாஜக 31 மக்களவை தொகுதிகளிலும், ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா 13 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 4 இடங்களிலும் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்சிபி-க்கு பாரமதி, ராய்கர், ஷிரூர் மற்றும் பர்பானி மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அஜித் பவாரின் உறவினரான சுப்ரியா சுலே பாரமதியின் தற்போதைய எம்.பி.யாக உள்ளார். வரும் மக்களவை தேர்தலில் இவரை எதிர்த்து அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் போட்டியிட வாய்ப்புள்ளது.
அதே போன்று ராய்கரில் உத்தவ் தாக்கரே சிவசேனா அணியைச் சேர்ந்த அனந்த் கீதே வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்புள்ளதால் அவரை எதிர்த்து என்சிபி மகாராஷ்டிரா தலைவரும், தற்போதைய எம்.பி.யுமான சுனில் தட்கரேவை நிறுத்த அஜித் பவார் முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், ஷிரூர் தொகுதியில் பிரதீப் காந்த் அல்லது அடல்ராவ் பாட்டீல், பர்பானி தொகுதியில் ராஜேஷ் விட்டேகரை என்சிபி களமிறக்கலாம் என தெரிகிறது.