அஞ்செட்டியை அருகே கர்ப்பிணியை சுட்டுக்கொன்ற தந்தை கைது


தேன்கனிக்கோட்டை, ஏப்.17-
அஞ்செட்டியை அருகே கர்ப்பிணியை சுட்டுக்கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தளியை அடுத்த அஞ்செட்டி அருகே உள்ள மாதையன் தொட்டியை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 60). விவசாயி. இவரது மகள் வெங்கடலட்சுமிக்கும் (21), கர்நாடக மாநிலம் மாலூர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (25) என்பவருக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. 3 மாத கர்ப்பிணியாக இருந்த வெங்கடலட்சுமி, யுகாதி பண்டிகையை கொண்டாட பெற்றோர் வீட்டிற்கு வந்திருந்தார். கடந்த 14-ந் தேதி மாலை அருணாசலத்திற்கும், அவருடைய மனைவி மாதேவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அவர்களை மகள் வெங்கடலட்சுமி சமாதானம் செய்ய முயன்றார்.
அப்போது அருணாசலம் தன்னிடம் இருந்த நாட்டுத்துப்பாக்கியால் மனைவி மாதேவியை நோக்கி சுட முயன்றார். இதை பார்த்த வெங்கடலட்சுமி தனது தாயை காப்பாற்ற குறுக்கே சென்றார். அப்போது வெங்கடலட்சுமி துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக தளி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய அருணாசலத்தை நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்த நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.