அடிப்படை வசதிக்கு ‘ஏங்கும்’ மலைக்குன்று மக்கள்

ஓசூர்,செப்.12- ஓசூர் மாநகராட்சி 26-வது வார்டுக்கு உட்பட்ட மலைக்குன்றில் உள்ள பார்வதி நகர் மற்றும் காலகுண்டா பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். மேலும், வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தொழில் நகரான ஓசூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு, பெரிய தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தமிழகத்தில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஓசூரும் ஒன்று. நகராட்சியாக இருந்த ஓசூர் கடந்த 2019-ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்ந்தது.
தரம் உயர்ந்தபோதும், அடிப்படை வசதிகளில் பின் தங்கியே உள்ளது. ஓசூர் மாநகராட்சி 26-வது வார்டுக்கு உட்பட்ட ராயக்கோட்டை சாலையில் உள்ள மலைக்குன்றில் பார்வதி நகர் மற்றும் காலகுண்டா ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடந்த 40 ஆண்டாக வசித்து வருகின்றனர்.
இக்குன்று புறம்போக்கு நிலத்தில் உள்ளதால், இங்குள்ள குடியிருப்புகளுக்கு பட்டா வழங்கவில்லை. ஆனால், மின்சாரம், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை உள்ளிட்ட அனைத்தும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், அடிப்படை வசதிகள் இல்லாததால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.
சேதமடைந்துள்ள குடியிருப்பு பகுதிக்குச் செல்லும் படிக்கட்டுப் பாதை
இது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணா என்பவர் கூறியதாவது: மலைக்குன்று மீது உள்ள எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி, 30 ஆண்டு களுக்கும் மேலாக போராடி வருகிறோம். மலை மீது ரேஷன் கடை இல்லாததால், 3 கிமீ தூரத்தில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வருகிறோம்.
10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தெருக்களில் முறையாக குப்பைகளை அள்ளாததால், வீதிகளில் குப்பைக் கழிவுகள் மலைபோல தேங்கியுள்ளன. சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால், வீடுகளைச் சுற்றியுள்ள காலி இடங்களில் கழிவுநீர் தேங்கி சுகாதாரமற்ற நிலையுள்ளது.
குப்பைகளை முறையாக அள்ளாததால், குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள கழிவு
சாலை வசதியில்லாததால் கரடு, முரடாண பாதையில் செல்லும் நிலையுள்ளது. தேர்தல் நேரத்தில் மட்டும் அரசியல் வாதிகள் வருவார்கள் அதன் பின்னர் எங்களையும், எங்களின் அடிப்படைத் தேவைகளையும் மறந்து விடுவார்கள். எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.