அடுத்தகட்ட போராட்டம்

காஞ்சிபுரம்: பிப். 26: பரந்தூர் புதிய விமான நிலையத்துக்கு காஞ்சிபுரம் வட்டத்தில் உள்ளபொடவூர் கிராமத்தில் நிலத்தை கையகப்படுத்துவதற்கான முதல்நிலை அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிலம் குறித்த தங்களின் கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம்.
தனி மாவட்ட வருவாய் அலுவலர், புதிய பசுமை வெளி விமான நிலைய திட்டம், பரந்தூர், காஞ்சிபுரம் என்ற முகவரியில் எழுத்துப்பூர்வமாக பொதுமக்கள் தங்களது ஆட்சேபனைகளைத் தெரிவிக்கலாம். அவற்றின் மீது ஏப்ரல் 4-ம் தேதி விசாரணை மேற்கொள்ளப்படும் எனத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கிராம மக்கள் நேற்று ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர்.
இந்தக் கூட்டத்தில் நெல்வாய், நாகப்பட்டு, ஏகாம்பரம், தண்டலம், வளத்தூர், மேலேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் முக்கிய நபர்கள் கலந்து கொண்டனர்.
ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், நாளை நில எடுப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவது மட்டுமில்லாமல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடவும் மக்கள் முடிவு செய்துள்ளனர்.