அடுத்த ஆண்டுடன் முதுநிலை படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வு ரத்தாகிறது

புதுடெல்லி, நவ.10 இளநிலை மருத்துவ படிப்புகளைப்போல முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கும் ஆண்டுதோறும் ‘நீட்’ தேர்வு நடத்தப்படுகிறது. இந்த மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கு பதிலாக ‘நெக்ஸ்ட்’ (தேசிய வெளியேறுதல் தேர்வு) என்ற பெயரில் பொதுவான தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு மாணவர்கள் இந்த தேர்வை எழுத வேண்டும். அதன்படி, எம்.பி.பி.எஸ். மாணவர்கள் மருத்துவ பணிகள் செய்வதற்கான லைசென்ஸ் பெறுதல், தகுதி அடிப்படையில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு செல்லுதல், வெளிநாடுகளில் மருத்துவம் படித்தவர்கள் இந்தியாவில் பணிகள் மேற்கொள்வதற்கான தகுதி பெறுதல் ஆகியவற்றுக்கு பொதுவாக இந்த தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய மருத்துவ கமிஷன் சட்டப்படி எம்.பி.பி.எஸ். இறுதியாண்டு மாணவர்கள் இந்த தேர்வை எழுத வேண்டியது கட்டாயம் ஆகும். இந்த சட்டம் கடந்த 2020-ம் ஆண்டு அமலுக்கு வந்துள்ள நிலையில், இந்த தேர்வை நடத்துவதற்கு 2024-ம் ஆண்டு செப்டம்பர் வரை கால அவகாசம் பெறப்பட்டு இருந்தது.இந்த நிலையில் தேசிய மருத்துவ கமிஷனின் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில், நெக்ஸ்ட் தேர்வை அடுத்த ஆண்டு (2023) டிசம்பர் மாதம் நடத்த முடிவு செய்யப்பட்டு, இது குறித்த விருப்பத்தை மத்திய சுகாதார அமைச்சகத்திடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவ்வாறு அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் நெக்ஸ்ட் தேர்வு நடத்தப்பட்டால், தற்போதைய நீட் தேர்வு அடுத்த ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது. அடுத்த ஆண்டு நடைபெறும் நெக்ஸ்ட் தேர்வை 2019-20-ம் ஆண்டு பிரிவு மருத்துவ மாணவர்கள் எழுத வேண்டும். இதில் பெறப்படும் மதிப்பெண் அடிப்படையில் 2024-25-ம் கல்வி ஆண்டுக்கான முதுநிலை மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த நெக்ஸ்ட் தேர்வை தேசிய மருத்துவ கல்வி வாரியத்துக்கு பதிலாக, எய்ம்ஸ் நிர்வாகம் நடத்தும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. எனினும் இது தொடர்பான இறுதி முடிவு இனிமேல்தான் எடுக்கப்படும் எனவும் அவை மேலும் கூறியுள்ளன.