அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அமல்

குஷிநகர், மே 31- அடிக்கடி தேர்தல் நடப்பது நாட்டுக்கு நல்லதல்ல என்றும் அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு நாடு ஒரே தேர்தல் என்ற முறை கொண்டுவரப்படும் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். உபி மாநிலம் குஷிநகர் தொகுதி பாஜ வேட்பாளர் விஜய்குமார் துபேயை ஆதரித்து ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் நேற்று பேசுகையில்,‘‘ அடிக்கடி தேர்தல் நடப்பது நாட்டுக்கு நல்லதல்ல. இதனால் அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு நாடு, ஒரே தேர்தல் முறை கொண்டுவர முயற்சி எடுக்கப்படும். பிரதமர் மோடியும்,பாஜவினரும் சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்துக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடப்பதை விரும்புகின்றனர். மோடியின் தலைமையின் கீழ் இந்தியா புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இந்தியா பேசுவதை உலக நாடுகள் கேட்கின்றன. பாகிஸ்தானில் உள்ள அரசியல்வாதிகள் கூட இந்தியாவை புகழ்கின்றனர். ஆனால்,
காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சியினர் இதை புரிந்து கொள்ள மறுக்கின்றனர். அவர்கள் மோடியை எதிர்க்கின்றனர். ஆட்சி அமைப்பு தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர்களுக்கு எதிராக உள்ளது என்று ராகுல் கூறுகிறார். அப்படியென்றால் அவரது கொள்ளுதாத்தா, பாட்டி மற்றும் தந்தை ஆகியோர்களின் ஆட்சி பிற்படுத்தப்பட்டோர்கள், தலித்துகளுக்கு எதிரானது என்பதை அவர் ஒப்பு கொள்கிறாரா? ராகுல் காந்தி தான் இதை தெரிவிக்கிறார். இதன் மூலம் காங்கிரஸ் ஆட்சி தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர்களுக்கு எதிரானது என்பதை ஏற்று கொள்கிறார் என அர்த்தம். இதே போன்ற விசித்திரமான ஒரு தலைவரை நீங்கள் பார்த்திருப்பீர்களா. அறிவார்ந்த நபர் யாரும் காங்கிரசை ஏற்று கொள்ள மாட்டார்கள்’’ என்றார்.