அடுத்த மாதம் மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி

புதுடெல்லி:: ஜன. 20 பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் மீண்டும் தமிழகத்துக்கு வர வாய்ப்பு உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.சென்னையில் நேற்று கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். நிகழ்ச்சிக்குப் பின்னர் கிண்டி ஆளுநர் மாளிகையில் நேற்று இரவு தங்கிய பிரதமரை, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்துப் பேசினார்.பின்னர் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: பிரதமர் மோடியின் 11 நாள் விரதத்தில், தமிழகத்தில் 3 நாட்கள் ஆன்மிகத் தலங்களுக்குச் செல்கிறார். ராமர் சென்ற இடங்களுக்கு எல்லாம் செல்லும் பிரதமர், பின்னர் அயோத்தி ராமர் கோயிலுக்குச் செல்கிறார்.
இந்த மாதத்தில் 2-வது முறையாக தமிழகத்துக்கு பிரதமர் வந்துள்ளார். இதனால் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.எனது ‘என் மண், என் மக்கள்’ யாத்திரையில் இம்மாத இறுதியில் பாஜக தேசியத் தலைவர் கலந்து கொள்கிறார். மேலும், யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமரையும் பங்கேற்கச் செய்யும் எண்ணத்தில் இருக்கிறோம். அதற்காக அவரிடம் தேதியைக் கேட்டுள்ளோம்.பாஜக சார்பில் வரும் 25-ம் தேதி தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 18 வயது முதல் 21 வயது வரையிலான, முதல்முறை வாக்காளர்களை அழைத்து கூட்டம் நடத்துகிறோம். அரசியல் எப்படி இருக்க வேண்டும், 2024 மக்களவைத் தேர்தல் எப்படி இருக்க வேண்டும் என்று அவர்களிடம் பிரதமர் மோடி பேசுகிறார்.எனவே, மீண்டும் அடுத்த மாதம் பிரதமர் மோடி தமிழகத்துக்கு வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. வரும் மக்களவைத் தேர்தலை தமிழக பாஜக மிக முக்கியமானதாகக் கருதுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.