அடுத்த 4 ஆண்டுகளில் வாகன தயாரிப்பில் இந்தியா முதலிடம்

புதுடெல்லி, அக். 6- சில தினங்களுக்கு முன்பு செக் நாட்டில் நடைபெற்ற உலக சாலை மாநாட்டில் மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “இந்திய வாகனத் துறை மிகப் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. 9 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய வாகன சந்தை மதிப்பு ரூ.4.5 லட்சம் கோடியாக இருந்தது. தற்போது அது ரூ.12.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. உலகளாவிய வாகனத் துறையில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி இந்தியா மூன்றாம் இடம்பிடித்துள்ளது. சீனா முதல் இடத்திலும் அமெரிக்கா இரண்டாம் இடத்திலும் உள்ளன. இந்நிலையில் அடுத்த 4 ஆண்டுகளில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா முதல் இடம் பிடிக்கும்” என்று தெரிவித்தார். சர்வதேச வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் பெரும் அளவில் முதலீடு செய்து வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் ரூ.20 ஆயிரம் கோடி, எம் ஜி இந்தியா நிறுவனம் ரூ.5 ஆயிரம் கோடி முதலீடுகளை அறிவித்தன. உலகின் முன்னணி மின் வாகனத் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, இந்தியாவில் ஆலை அமைக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வாகனத் தயாரிப்பில் இந்தியா அடுத்த 4 ஆண்டுகளில் சீனாவை பின்னுக்குத் தள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.