அடுத்த 5 நாட்களுக்குகர்நாடகத்தில் இடியுடன் மழை

பெங்களூர் : மே. 25 – தமிழகத்தின் கடலோரத்தில் மேலடுக்கு காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ள நிலையில் இதன் விளைவாய் அடுத்த ஐந்து நாட்களுக்கு மாநிலத்தில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மாநிலத்தின் வடக்கு உள்பகுதிகள் , மற்றும் கடலோர மாவட்டங்களில் சாதாரண மழைக்கான வாய்ப்புகள் உள்ளது. தெற்கு பகுதியில் பெரும்பாலான மாவட்டங்களில் 2 நாட்கள் மழை பெய்யும் என்பதுடன் 17 மாவட்டங்களில் கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தக்ஷிண கன்னடா , உத்தர கன்னடா , உடுப்பி , பாகல்கோட்டே , பெலகாவி , பீதர் , தார்வாட் , கதக் , ஹாவேரி , கலபுரகி , கொப்பலா , ராய்ச்சூர் , விஜயபுரா , யாதகிரி , சாமராஜ்நகர் , சிக்கபள்ளாபுரா , சித்ரதுர்கா , தாவணகெரே , கோலார் , மண்டியா , மைசூர் , ராம்நகர் , சிவமொக்கா , தும்கூர் மற்றும் விஜயநகர ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புகள் உள்ளது. மாநிலத்தில் ஓரிரு இடங்களில் சூறாவளி இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்யும். இந்த காற்றின் வேகம் மாநிலத்தின் உள்பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி மீ மற்றும் கடலோர மாவட்டங்களில் 30 முதல் 40 கி மீ இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் பெங்களூரில் சாமான்யமாக மேகம் சூழ்ந்த வானிலை இருக்கும். மாலை அல்லது இரவில் பலமான காற்றுடன் கூடிய மழை பெய்யும். நகரில் காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 50 கி மீ இருக்கும். நகரில் அதிக பட்ச உஷ்ணம் 32 ஆகவும் குறைந்த பட்சம் 21 டிகிரி செல்ஸியஸ் இருக்கும். நேற்று சிவமொக்கா மாவட்டத்தின் ஹஞ்சதகட்டேவில் 6 செ மீ , சிக்கமகளூரு மாவட்டத்தின் கம்மராடி ஜெயபுராவில் 5 செ மீ , தக்ஷிண கன்னடா மாவட்டத்தின் ஷ்ரவணபெலகோலா , தக்ஷிண கன்னடா மாவட்டத்தின் தர்மஸ்தலா , ஹாசன் மாவட்டத்தின் அரக்கலகூடு ஆகிய பகுதிகளில் மழை பெய்துள்ளது. இதே வேளையில் நகரின் கீழ்ப்பாலங்களில் தேங்கும் தண்ணீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண மாநகராட்சி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கே ஆர் சர்க்கிள் மேம்பாலத்தின் அடியில் தேங்கிய மழை நீரில் மூழ்கி தகவல் தொழில் நுட்ப ஊழிய பெண் ஒருவர் உயிரிழந்த பின்னர் கடும் கண்டனத்திற்கு உள்ளான மாநகராட்சி தற்போது விழித்து கொண்டு பாலங்கள் அடியில் நீர் தேங்குவதை தவிர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்வதில் மும்முரமாகியுள்ளது.