அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

புதுடெல்லி, நவ. 5 –
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால், சென்னை உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதற்கிடையே, வங்கக் கடலில் நவம்பர் 9-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது 10, 11-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி திசையை நோக்கி நகரக்கூடும். காற்றழுத்தத்தின் நகர்வு வலிமை குறித்து தொடர்ந்து கண்காணித்து தெரிவிக்கப்படும் என தெரிவித்தார். இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, தூத்துக்குடி, திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.