அணுகுமுறையை மாற்றுமா இந்திய அணி?

விசாகப்பட்டினம், பிப். 2- இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட்கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையே 5 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளும் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மைதானத்தில் இன்று தொடங்குகிறது. சொந்த மண்ணில் எப்போதும் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்ட அணுகுமுறை, டாம் ஹார்ட்லியின் சுழல் ஆகியவற்றால் தோல்வியை சந்திக்க நேரிட்டது.
இதில் இருந்து மீண்டு வந்து இங்கிலாந்து அணிக்கு பதிலடி கொடுக்க வேண்டிய நெருக்கடியுடன் 2-வது டெஸ்ட் போட்டியை எதிர்கொள்கிறது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இதேசூழ்நிலையை இந்திய அணி எதிர்கொண்டிருந்தது. அப்போது சென்னையில் நடைபெற்ற முதல்டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி அதன் பின்னர் 3 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று தொடரைவென்றிருந்தது. இதனால் இம்முறையும் இந்திய அணிமீண்டெழும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் அது எளிதாக இருக்காது என்ற கருதப்படுகிறது. ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டின் பாதையை மறுவரையறை செய்துள்ள இங்கிலாந்து அணியின் அதிரடி மட்டை வீச்சு அணுகுமுறைக்கு எதிராக இந்திய அணிபோராட வேண்டிய நிலை உருவாகி உள்ளது. ஹைதராபாத் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 190 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்து அசாத்தியமான வெற்றியை பதிவு செய்தது.
முன்னணி பேட்ஸ்மேனான ஆலி போப்பின் பேட்டிங் முக்கியத்துவம் பெற்றிருந்தது. ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட்களால் தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டு அவர், குவித்த 196 ரன்கள் பெரிய அளவிலான வித்தியாசத்தை ஏற்படுத்தியதுடன் வெற்றிக்கும் வழிவகுத்தது. அதேவேளையில் உலகத்தரம் வாய்ந்த ஜடேஜா, அஸ்வின், அக்சர் படேல் ஆகியோரின் சுழற்பந்து வீச்சை எந்த ஒரு கட்டத்திலும் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கவில்லை. இது ஒட்டுமொத்த இந்திய அணிக்கும் ஆச்சர்யம் அளித்தது.