அணையில் 3 தூண்கள் சரிந்ததால் பரபரப்பு: தண்ணீர் வெளியேற்றம்

திருமலை, அக். 25- தெலங்கானாவில் ரூ.80,000 கோடியில் கட்டப்பட்ட காலேஸ்வரம் அணையில் 3 தூண்கள் சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தெலங்கானா முதல்வரின் கனவு திட்டமாக கோதாவரியின் குறுக்கே 1.6 கி.மீட்டர் நீளத்திற்கு 85 மதகுகள், தூண்களுடன் தடுப்பணை மேம்பாலத்துடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. மகாராஷ்டிராவில் உற்பத்தியாகி தெலங்கானா வழியாக பாய்ந்து ஆந்திராவில் கடலில் கலக்கும் கோதாவரி நதியின் மத்தியில் கட்டப்பட்ட காலேஸ்வரம் நீர்பாசன திட்டத்தின் ஒரு பகுதியாக ஜெயசங்கர் பூபாலபள்ளி மாவட்டத்தில் உள்ள மேடிகட்டா என்ற இடத்தில் ரூ.80,000 கோடியில் அணை கட்டப்பட்டது. இந்த அணையில் எண் 17 முதல் 21 வரை உள்ள தூண்கள் நேற்று முன்தினம் இரவு பலத்த சத்தத்துடன் சரிவு ஏற்பட்டு 4 அடிக்கு கீழே இறங்கியது.
இதனால், தடுப்பணை அருகே அதிகாரிகள் 144 தடையை அமல்படுத்தினர். தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் அனில் ஜெயின் தலைமையில் 6 பேர் கொண்ட நிபுணர் குழு நேரில் சென்று பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில், தடுப்பணையின் 20வது தூணில் சரிவு ஏற்பட்டு கேட் உடைந்துள்ளதால் 45,260 கனஅடி தண்ணீர் திறந்து வெளியேற்றி வருகின்றனர். அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து 12,240 கனஅடியாக உள்ளது. இந்த தடுப்பணை எல் அண்ட் டி வசம் உள்ளதால் அதை சீரமைக்கும் பொறுப்பும் அந்த நிறுவனத்திற்கே உள்ளது என்று தெரிவித்துள்ளனர். * தோல்விக்கான உதாரணம்கா லேஸ்வரம் திட்ட அதிகாரி நல்லா வெங்கடேஷ்வர்லு கூறுகையில், ‘தடுப்பணை தண்ணீர் வடிந்த பிறகு விபத்து குறித்து விசாரணை நடத்தி முழு விவரம் தெரிவிக்கப்படும்’ என்றார். ஒன்றிய அமைச்சர் கிஷன்ரெட்டி கூறுகையில், ‘காலேஸ்வரம் திட்டம் முதல்வர் சந்திரகேரராவ் அரசின் தோல்விக்கான உதாரணம். ஆண்டுக்கு 4.5 டிஎம்சி தண்ணீர் கொடுக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார். ஆனால், மக்களின் பணத்தை கொள்ளையடிப்பதற்காக இந்த திட்டம் அவசர அவசரமாக கட்டப்பட்டது’ என்றார்.