அண்ணனுக்கு தங்கை அறிவுரை

கடப்பா: மார்ச் 16 ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சித்தப்பாவும், முன்னாள் ஆந்திர அமைச்சருமான ஒய்எஸ். விவேகானந்த ரெட்டியின் 5-வது நினைவு நாள் நேற்று கடப்பாவில் அனுசரிக்கப்பட்டது. ஒய்எஸ். விவேகானந்த ரெட்டி இதே நாளில் அவரது வீட்டில் மர்ம நபர்களால் 5 ஆண்டுகளுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்டார். முதலில் அவர் மாரடைப்பு வந்து இறந்ததாக கூறினர். ஆனால், பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் படுகொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அப்போதே ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திர முதல்வராக பதவி ஏற்றுவிட்டார். ஆனால், இதுவரை முதல்வரின் சொந்த சித்தப்பாவை யார் கொலை செய்தது? எதற்காக கொலை செய்தனர் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.
மற்றொரு சித்தப்பா மகனும், தற்போதைய கடப்பா எம்பியுமான அவினாஷ் ரெட்டிதான், கூலி ஆட்களை ஏவி கொலை செய்தார் என ஒய்.எஸ். விவேகானந்த ரெட்டியின் மகள் ஒய்.எஸ். சுனிதா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இவ்வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த சூழலில் கடப்பாவில் ஒய்.எஸ். விவேகானந்த ரெட்டியின் 5-வது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையும், ஆந்திர காங்கிரஸ் தலைவருமான ஒய்எஸ் ஷர்மிளா பேசியதாவது:
கொலை நடக்கும் முந்தைய நாள் இரவு வரை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்காக உழைத்த சித்தப்பா ஒய்எஸ் விவேகானந்த ரெட்டி வீட்டிலேயே படுகொலை செய்யப்பட்டார். ஆனால், கொலையாளிகளுக்கு அண்ணன் ஜெகன்மோகன் ரெட்டி ஆதரவு அளித்து காப்பாற்றி வருகிறார். அண்ணா நீ கண்ணாடி முன் நின்று உன் மனசாட்சியின் படி யோசி அண்ணா. இவ்வாறு ஒய்.எஸ். ஷர் மிளா பேசினார்.