அண்ணாமலையார் கோவிலில் துவங்கிய பஞ்சரத தேரோட்டம்! பக்தர்கள் பரவசம்

திருவண்ணாமலை,நவ. 23: திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபதிருவிழாவின் 7 ம் நாளான இன்று பஞ்சரத மகா தேரோட்டம் துவங்கியது. முதலாவதாக அரோகரா’ கோஷத்துடன் விநாயகர் தேரை பொதுமக்கள் வடம்பிடித்து இழுத்தனர். இதன் தொடர்ச்சியாக முருகர், அண்ணாமலை, சண்டிகேஸ்வரர் தேரோட்டம் தொடர்ந்து நடைபெற உள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்ளது. நினைத்தாலே முக்தி தரும் தலமான இங்கு ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் பிரசித்திப்பெற்றது. இந்த திருவிழாவுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம். இதனால் ஒவ்வொரு ஆண்டும் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் 10 நாட்கள் திருக்கார்த்திகை தீப திருவிழா கொண்டாப்படும். இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. வேதமந்திரங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் கோவிலில் உள்ள 67 அடி உயர தங்க கொடிமரத்தில் கொடியை ஏற்றினர். இதையடுத்து முதல் 5 நாட்கள் மாடவீதியுலாக்கள் நடந்தன. காலை, மாலை வேளையில் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உண்ணாமலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் கோவில் பிரகாரத்தை வலம் வந்தனர். கார்த்திகை திபத்திருவிழாவின் 7 வது நாளான இன்று பஞ்சரத மகாத்தேரோட்டம் தொடங்கியது. அதாவது இன்று காலை 7.45 மணிக்கு விநாயகர் தேரோட்டம் துவங்கியது. பக்தர்கள் வடம்பிடித்து அரோகரோ கோஷத்துடன் தேரை இழுத்தனர். இதையடுத்து வள்ளி, தெய்வானை சமேத முருகர் தேர் வலம் வர உள்ளது. இந்த 2 தேர்களும் நிலையை அடைந்த பிறகு பெரிய தேர் என கூறப்படும் அண்ணாமலையார் தேரோட்டம் துவங்க உள்ளது.