புதுடெல்லி, செப். 1- அதானி குழும நிறுவன பங்குகளில் குடும்பத்தினரே ரகசியமாக முதலீடு செய்ததாக ஓசிசிஆர்பி அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது. இதை அதானி குழுமம் மறுத்துள்ளது. கவுதம் அதானி தலைமையிலான அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் கடந்த சில ஆண்டுகளாக மளமவென உயர்ந்தன. இதன்மூலம் கவுதம் அதானி உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 3-ம் இடத்துக்கு முன்னேறினார். அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் ஓர் அறிக்கை வெளியிட்டது. அதில், இந்தியாவைச் சேர்ந்த அதானி குழுமம், தனது நிறுவனங்களின் பங்கு விலையை செயற்கையாக உயர்த்தியதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது. நிறுவன கணக்கு வழக்குகளில் முறைகேடு செய்துள்ளதாகவும் போலியான வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் அதானி குழும பங்குகளில் முதலீடு செய்யப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. இதனால் அதானிகுழும பங்குகள் கடும் சரிவைசந்தித்தன. இதனிடையே இந்தப்புகார் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியமும் (செபி) விசாரித்து வருகிறது. இந்நிலையில், அதானி குழும நிறுவன பங்குகளில் குடும்பத்தினரே ரகசியமாக முதலீடு செய்ததாக, திட்டமிட்ட குற்றம் மற்றும் ஊழலை வெளிப்படுத்தும் அமைப்பு (ஓசிசிஆர்பி) சில ஆவணங்களுடன் நேற்று குற்றம் சாட்டி உள்ளது. குறிப்பாக, மொரீஷியஸ் நாட்டிலிருந்து அதானி குழும நிறுவன பங்குகளில் கோடிக் கணக்கில் ரகசியமாக முதலீடு (ஓபக் பண்ட்) செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. சகோதரர் முக்கிய பங்கு: இந்த ரகசிய முதலீட்டு நடவடிக்கைகளில் கவுதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி முக்கிய பங்கு வகித்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, வெளிநாட்டைச் சேர்ந்த நாசர் அலி ஷபான் அலி மற்றும் சாங் சுங்-லிங் ஆகிய 2 வர்த்தக கூட்டாளிகள் அதானி குழும நிறுவன பங்குகளை போட்டி போட்டுக்கொண்டு வாங்கி விற்றுள்ளனர். இவர்களுடன் வினோத் அதானிக்கு தொடர்பு இருப்பதாகவும் அந்த முதலீடு அதானி குடும்பத்தினருக்கு சொந்தமானது என்றும் ஓசிசிஆர்பி தெரிவித்துள்ளது. இந்த தகவல் வெளியானதையடுத்து, அதானி குழும பங்குகள் நேற்று சுமார் 3 சதவீதம் சரிந்தது.