அதானி குழும பங்குகள் மதிப்பு அதிகரிப்பு

மும்பை:ஜூன் 6- நேற்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 2,303 புள்ளிகள் உயர்ந்து 74,382 ஆகவும், நிஃப்டி 735 புள்ளிகள் உயர்ந்து 22,620 ஆகவும் ஏற்றம் கண்டன. சதவீத அளவில் சென்செக்ஸ் 3.20%, நிஃப்டி 3.36% உயர்ந்தன.
கடந்த சனிக்கிழமை மக்களவை இறுதிக் கட்டத் தேர்தல் நிறைவடைந்ததையடுத்து, ஊடகங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டன. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 350 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என்றும் காங்கிரஸ் 150 இடங்கள் வரையிலேயே வெல்லும் என்றும் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. இதையடுத்து கடந்த திங்கள் கிழமை பங்குச் சந்தை உச்சம் தொட்டது.
ஆனால், நேற்று முன்தினம் தேர்தல் முடிவுகள் வெளியானபோது கருத்துக் கணிப்புக்கு மாறாககாங்கிரஸ் அதிக இடங்களில் வென்றது. அதிக இடங்களில் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட பாஜக கூட்டணி 291 இடங்களிலேயே வென்றது. தவிர, பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் போனது. இதனால், நேற்றுமுன்தினம் பங்குச் சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டது.
சென்செக்ஸ் 4389 புள்ளிகள், நிஃப்டி 1379 புள்ளிகள் சரிந்தன. மொத்த அளவில் சென்செக்ஸ் 5.74 சதவீதம் நிஃப்டி 5.93 சதவீதம்சரிந்தன. இதனால் முதலீட்டாளர்களுக்கு ரூ.30 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்க இருப்பது உறுதியான நிலையில் பங்குச் சந்தை மீண்டும் ஏற்றம் கண்டது.
அதிகபட்சமாக அதானி போர்ட்ஸ் 8.46%, இன்டஸ்இன்ட் 7.87%, ஹிண்டால்கோ 7.12%, ஹீரோ மோட்டாகார்ப் 6.55%, எம் அண்ட் எம் 6.53%, டாடா ஸ்டீல் 6.45%, அதானி எண்டர்பிரைசஸ் 5.92%, ஸ்ரீராம் பைனான்ஸ் 5.61% என்ற அளவில் ஏற்றம் கண்டன.
அதேசமயம், பாரத் டைனமிக்ஸ் 9.16%, கார்டன் ரீச் ஷிப்பில்டர்ஸ் 7.49%, கொச்சின் ஷிப்யார்டு 7.02% சரிந்தன.அதானி குழுமம்: நேற்றுமுன்தினம் அதானி நிறுவனங்களின் பங்குகள் 20% வரை வீழ்ச்சி அடைந்தன. இந்நிலையில் நேற்று அவை மீண்டும் ஏற்றம் கண்டன. அதானி குழுமத்தின் 10 நிறுவனங்களில் 9 நிறுவனங்களின் பங்குகள் நேற்று உயர்ந்தன. அதானி கிரீன் எனர்ஜி, அதானி போர்ட்ஸ், அம்புஜா சிமெண்ட்ஸ், அதானி எண்டர்பிரைஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 6% முதல் 11% வரை உயர்ந்தன. அதானி எனர்ஜி சொல்யூஷன் நிறுவனத்தின் பங்கு மதிப்பு மட்டும் 2.58% சரிந்தது.