அதிகம் ரீல்ஸ் பார்க்காதீர்கள் மாணவர்களுக்கு மோடி அறிவுரை

புதுடெல்லி, ஜன. 30- உடற்பயிற்சியும் ஆழ்ந்த தூக்கமும் அவசியம் என்றும் செல்போனில் அதிகம் ரீல்ஸ் பார்க்கக் கூடாது என்றும் பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியருக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை கூறியுள்ளார். தேர்வு குறித்த மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். இதன்படி 7-வது ஆண்டாக தேர்வு குறித்த பிரதமரின் கலந்துரையாடல் நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடைபெற்றது.டெல்லி பாரத் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் 3,000 பேர் நேரடியாக பங்கேற்றனர். நாடு முழுவதும் 2.26 கோடி மாணவர்கள், 14.93 லட்சம் ஆசிரியர்கள், 5.69 கோடி பெற்றோர் ஆன்லைன் வாயிலாக கலந்துரையாடலில் கலந்து கொண்டனர். இதில் மாணவ,மாணவியரின் கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் அளித்தார். மன அழுத்தத்தை நீங்கள் எவ்வாறு எதிர்கொள்கிறீர்கள் என்று சென்னையை சேர்ந்த மாணவர் வாகேஷ், உத்தராகண்டை சேர்ந்த சினேகா தியாகி ஆகியோர் கேள்வி எழுப்பினர். அதற்கு பிரதமர் மோடி அளித்த பதில் வருமாறு: பிரதமர் பதவியில் பல்வேறு வகையான மன அழுத்தங்கள் ஏற்படுவது இயல்பானது. ஒவ்வொருவர் வாழ்விலும் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது. சிலர் பிரச்சினைகளை எதிர்கொள்ளாமல் விலகி ஓடுகின்றனர். அவர்களால் வாழ்வில் பெரிதாக சாதிக்க முடியாது.அனைத்து சவால்களையும் நான் துணிச்சலாக எதிர்கொள்கிறேன். இதன்மூலம் புதியவற்றை கற்றுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பதில் அளித்தார். மேலும் பல்வேறு மாணவர்களின் கேள்விகளுக்கு பிரதமர் மோடி அளித்த பதில் வருமாறு: தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள் 3 விதமான அழுத்தங்களை எதிர்கொள்கின்றனர். முதலாவது சக மாணவர்கள், 2-வது பெற்றோர்,3-வது சுயமாக மனஅழுத்தம் ஏற்படுகிறது. தேர்வில் எதிர்பார்த்தமதிப்பெண் கிடைக்கவில்லைஎன்றால் மாணவர்கள் தங்களைதாங்களே நொந்துகொள்கின்றனர். தோல்விகளை கண்டு துவளக்கூடாது. தேர்வுக்கான இலக்குகளை நிர்ணயித்து படிப்படியாக செயல்திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். திட்டமிட்டுசெயல்பட்டால் தேர்வுக்கு முன்பாகநீங்கள் முழுமையாக தயாராகி விடலாம். பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்கக்கூடாது. அப்பா, அம்மா, அண்ணன், அக்கா என தொடர்ச்சியாக அளவுக்கு அதிகமாக அறிவுரைகளை அள்ளி தெளித்தால் மாணவ, மாணவியருக்கு மனஅழுத்தம் ஏற்படும். தங்கள் பிள்ளைகளை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசுவதை பெற்றோர் முழுமையாக தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் ஒரு பிள்ளையை உயர்வாகவும் மற்றொரு பிள்ளையை தாழ்த்தியும் பேசக்கூடாது. மாணவர்களுக்கு முக்கிய அறிவுரைகளை கூற விரும்புகிறேன். உங்களுடன் நீங்கள் போட்டியிட வேண்டும்; சக மாணவர்களுடன் போட்டி மனப்பான்மை, வெறுப் புணர்வை வளர்க்கக் கூடாது. கடைசி நேரத்தில் பாடங்களை படிப்பதை தவிர்க்க வேண்டும். தேர்வு அறையில் நுழைவதற்கு முன்பாக நண்பர்களோடு இயல் பாக பேசி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். செல்போனை சார்ஜ் செய் யாவிட்டால் செயலிழந்துவிடும். நமது உடலுக்கும் சார்ஜிங் அவசியம். சத்துள்ள உணவு வகைகளை சாப்பிட வேண்டும். காலை நேர சூரிய ஒளி உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும். இரவு அதிக நேரம் விழித்திருந்து படிக்கக்கூடாது. ஆழ்ந்த தூக்கம் அவசியம். நாள்தோறும் குறைந்தபட்சம் இருவகையான உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும். உடல் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே மனம் ஆரோக்கியமாக இருக்கும், தேர்வில் சாதிக்க முடியும். கல்வி கற்பதற்கு மட்டுமேசெல்போனை பயன்படுத்த வேண்டும். செல்போனில் ரீல்ஸ் பார்த்து நேரத்தை வீணாக்கக்கூடாது. சமூக வலைதளங்களில் மூழ்கியிருக்கக்கூடாது.சாப்பிடும்போது, படிக்கும்போது செல்போனை பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.