அதிகரிக்கும் காற்று மாசு: 1- 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு

டெல்லி: நவ.4-
டெல்லி மற்றும் உத்திரப்பிரதேச எல்லை மாவட்டங்களில் காற்று மாசு அபாயகரமான அளவுக்கு அதிகரித்துள்ளதை அடுத்து, நொய்டாவில் உள்ள பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளை தொடங்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு பிறகு டெல்லியில் காற்றின் தரம் மோசமான அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வேளாண் கழிவுகளை விவசாயிகள் தீ வைத்து எரிப்பதால் எழும் புகைமூட்டம் டெல்லி முழுவதையும் விழாப்பித்திருக்கிறது. இதனால் காற்றில் பிராண வாயுவின் விழுக்காடு பெருமளவு குறைந்து காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. குறிப்பாக உத்திரப்பிரதேசம் – டெல்லி எல்லையில் உள்ள நொய்டா நகரத்தில் காற்றின் தரம் அபாயகரமான அளவான 562 புள்ளிகளை எட்டியிருப்பதாக காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.
ஹரியானா – டெல்லி எல்லையில் உள்ள குருகிராமிலும் காற்றின் தரம் 539 புள்ளிகளை எட்டி மிக மோசமான நிலையில் இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நொய்டா சுற்றுவட்டாரத்தில் காற்றின் தரம் மோசமாகி வரும் நிலையில், 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு நவம்பர் 8ம் தேதி வரை ஆன்லைன் வகுப்புகளை கட்டாயமாக்கி கவுதமபுத்தர் நகர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரி உத்தரவிட்டுள்ளார். 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் முடிந்தவரை ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது குறித்து பரிசீலனை செய்யும் பள்ளி நிர்வாகிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.