அதிகாரிகள் துன்புறுத்தல் தொழிலாளி தற்கொலை

பெங்களூர் : டிசம்பர். 15 – கே டி டி எல் கைக்கடிகாரம் தயாரிக்கும் நிறுவனத்தின் மேலாளர் மற்றும் சூப்பர்வைசர் ஆகியோரின் கொடுமையால் வெறுத்துப்போய் தொழிலாளி ஒருவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் டி தாசரஹள்ளியில் நடந்துள்ளது. இந்த பகுதியில் வசித்து வந்த ஆந்திர மாநிலத்தை சேர்ந்த கோவிந்தா (24) என்பவர் தற்கொலை செய்து கொண்ட தொழிலாளி. இவர் பணிக்கு விடுப்பு போட்டதால் இவரை வேலையில் இருந்து நீக்கிவிடுவதாக மிரட்டியதால் கோவிந்தா தன் மொபைல் போனில் குரல் தகவல் மற்றும் மரண வாக்குமூலம் எழுதி வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். கடந்த ஆறு வருடங்களாக பீன்யாவில் உள்ள கே டி டி எல் கடிகார நிறுவனத்தில் பணியாற்றிவந்த கோவிந்தா இரவு ஆர் எம் பி அபார்ட்மெண்டில் நிர்வாக பொறுப்பை ஏற்று தங்கி வந்துள்ளார். இவர் விடுமுறை எதுத்ததற்காக நிறுவனத்தின் மேலாளர் மற்றும் மேற்பார்வையாளர் இருவரும் இவருக்கு தொல்லைகள் கொடுத்து வந்துள்ளனர். தவிர வேலையில் இருந்து நீக்கிவிடுவதாகவும் மிரட்டியதாக கோவிந்தா தன் மொபைல் போனில் பதிவு செய்துள்ளார். வழக்கம் போல் பணியை முடித்து கொண்டு அபார்ட்மென்டுக்கு வந்த கோவிந்தா தன் தாயாரின் புடவையை கொண்டு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பாகல்குண்டே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பின்னர் நிறுவனத்தின் மேலாளர் குருராஜ் மற்றும் மேற்பார்வையாளர் நஞ்சப்பா ஆகியரை தங்கள் வசம் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.