அதிகார நந்தி வாகனத்தில் உலா வந்த கபாலீஸ்வரர்

சென்னை:மார்ச். 18
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனித் திருவிழாவின் மூன்றாம் நாளான அதிகார நந்தி வாகனத்தில் கபாலீஸ்வரர் மாட வீதிகளில் உலா வந்து அருள்பாலித்தார். நான்கு மாட வீதிகளிலும் கம்பீரமாக ஆடி அசைந்து அதிகார நந்தி வாகனத்தில் உலா வந்த கபாலீஸ்வரரை கூடியிருந்த பக்தர்கள் கபாலி.. கபாலி என்று முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். அதிகார நந்தி: அதிகார பதவியும் வேலையில் உயர் பதவியும் வேண்டுபவர்கள் சிவ ஆலயங்களில் நந்திபகவானிடம் வேண்டிக்கொண்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது நம்பிக்கை. கயிலாயத்தில் வாயிற்காவலாக நின்றிருக்கும் நந்திக்கு, சிவபெருமானை தரிசிக்க வருபவர்களை அனுமதிக்கும் அதிகாரம் கொண்டவராக உள்ளமையினால் அதிகார நந்தி என்ற பெயர் வந்தது.அதிகார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்பெறும் ஐவகை நந்திகளில் மூன்றாவதாக இருப்பதாகும்.
நந்தி தேவர் வரலாறு: பூலோகத்தில் சிவாதர் என்ற சிவபக்தர் வாழ்ந்தார். அவரது மனைவி சித்திரவதி. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் சிவாதர் சிவனை நினைத்து தவம் செய்தார். தவத்தால் மனம் குளிந்த சிவன் அவரது எண்ணம் நிறைவேற ஆசிர்வதித்தார். காலங்கள் கழிந்தது. ஒரு நாள் சிவதார் நிலத்தை உழும்போது தங்கபேழை ஒன்றை கண்டார். அதில் தங்க விகரகம் போன்ற காளைக்கன்று வடிவிலான குழந்தை ஒன்று இருந்தது. அந்த குழந்தைக்கு நந்தி என்று பெயர் வைக்குமாறு சிவதார் காதில் சிவபெருமான ஓதினார்.நந்தி சிறு வயதிலேயே சாஸ்திரம், வேதங்களை கற்று 7 வயதிலேயே ஞான பண்டிதராக விளங்கினார். இவர் மீது பற்று கொண்ட நந்தி தேவர் என அழைக்குமாறு சிவன் அசீரியாக ஒலித்தார். நந்தி தேவருக்கு சுயஞ்சை என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். நந்திதேவரின் கால்கள், சமம், விசாரம், சந்தோஷம், சாதுசங்கமம் எனும் நான்கு விதமாக குணத்தை வெளிப்படுத்துகிறது. சிவன் இவர் மீது தீவிர பற்று கொண்டதால், அவருக்கு நிகரான பலம் பெற்றவராகவே நந்திதேவர் கருதப்படுகிறார். தூய்மையான வெண்மை நிறம் கொண்டவர் நந்திதேவர். கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழா: மயிலையே கயிலை என்று போற்றப்படும் பெருமைக்குரிய மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத திருவிழா கடந்த 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தினசரியும் கபாலீஸ்வரர் மாட வீதிகளில் உலா வந்து அருள்பாலிக்கிறார். மூன்றாம் நாளான இன்றைய தினம் அதிகார நந்தி வாகனத்தில் எழுந்தருளினார் கபாலீஸ்வரர். திருமயிலை அதிகார நந்தி 100 வருட சிறப்பு வாய்ந்த நந்தி. வேலையில் பிரச்சனை என்றாலும் தகுதிகேற்ப அதிகாரம் இல்லை என்றாலும் உயர்பதவி முன்னேற்றம் கிடைக்கா விட்டாலும் திருமயிலை கபாலீஸ்வரர் அதிகார நந்தியை தரிசித்து பிரார்த்தனை செய்துக்கொள்ளலாம். அடுத்த ஆண்டு அதிகார நந்தியை பார்க்கும் முன் உங்களுக்கு அதிகாரம் கிடைத்துவிடும் என்பது நம்பிக்கை.