அதிபர் மக்ரோனுக்கு இடியாய் வந்த தேர்தல் முடிவுகள்

பாரிஸ், ஜூலை 1- பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தற்போது அதிபராக இருக்கும் இம்மானுவேல் மக்ரோனின் கட்சி தோல்வியைத் தழுவும் ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. தீவிர வலதுசாரிகள் ஆட்சியை அமைக்கும் சூழல் உருவாகி உள்ள நிலையில், ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் கட்சி 3ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. ஐரோப்பியாவில் உள்ள முக்கிய நாடுகளில் ஒன்று பிரான்ஸ். அங்கு இப்போது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. பிரான்ஸை பொறுத்தவரை அங்கு அதிபர் ஆட்சி முறையே நடைபெறுகிறது. அங்கு அதிபருக்கான தேர்தல் தனியாக நடைபெறும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதாவது எம்பிக்களுக்கான தேர்தல் தனியாக நடைபெறும். அந்த நாடாளுமன்றத் தேர்தல் தான் இப்போது அங்கு நடைபெறுகிறது. பிரான்ஸ் தேர்தல்: பிரான்ஸ் நாட்டில் மொத்தம் 577 எம்பிக்கள் இருக்கும் நிலையில், அங்கு இரண்டு சுற்றுகளாகத் தேர்தல் நடைபெறும். முதல் சுற்றில் அனைத்து வேட்பாளர்களும் தேர்தலில் போட்டியிடுவார்கள். அதில் முதலில் வந்தவர் 50%க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றால் மட்டுமே அவர் வென்றவராக அறிவிக்கப்படுவார். அதாவது நமது நாட்டில் 3 பேர் போட்டியிடுகிறார்கள் என்றால் அவர்களில் அதிக வாக்குகளை வென்றவர்கள் தேர்தலில் வெல்வார்கள். முதலில் வந்த நபர் 40% வாக்குகளை மட்டுமே பெற்றாலும் கூட அவரே வென்றவராக அறிவிக்கப்படுவார். ஆனால், பிரான்ஸ் நாட்டில் அப்படி இல்லை. முதலில் வந்த நபர் 50% வாக்குகளைப் பெற்றால் மட்டுமே அவர் வென்றவராக அறிவிக்கப்படுவார். ஒருவேளை யாரும் அந்த 50% வாக்குகளைப் பெறவில்லை என்றால் அடுத்து 2ஆவது சுற்றுத் தேர்தல் நடைபெறும். அதில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தவர்கள் போட்டியிடுவார்கள். அதேபோல வேறு யாராவது 12.5% மேல் வாக்குகளைப் பெற்றிருந்தால் அவர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும். இந்த முறையிலேயே அங்குத் தேர்தல் நடைபெறுகிறது. அதிபர் தேர்தல் தனியாக நடக்கும் நிலையில், இந்த நாடாளுமன்றத் தேர்தலை வைத்தே பிரதமர் யார் என்பது தீர்மானிக்கப்படும். பொதுவாக அதிபரும் பிரதமரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தால் அதிபரால் நினைத்து காரியங்களை எளிதாகச் செய்ய முடியும். நினைக்கும் சட்டங்களை உத்தரவுகளை எளிதாகப் பிறப்பிக்க முடியும். அதேநேரம் இருவரும் வேறு வேறு கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தால் அதிபரின் அதிகாரம் குறையும். இதன் காரணமாகவே இந்த தேர்தல் அங்கு முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. Advertisement யாருக்கு வெற்றி வாய்ப்பு: சமீபத்தில் அங்கு முதலாம் சுற்றுத் தேர்தல் நடைபெற்ற நிலையில், அதில் தற்போது ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் கட்சி 3ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. தீவிர வலதுசாரியான மரைன் லு பென்னின் தீவிர வலதுசாரி தேசிய பேரணி அதிக இடங்களில் பிடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. முதலாம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் தேசிய பேரணி கட்சிக்கே அதிக சீட்கள் கிடைக்கும் என்பது போன்ற சூழல் உருவாகியுள்ளது. 2ஆவது சுற்று: இருப்பினும், அங்கு ஜூலை 7ஆம் தேதி 2ஆவது சுற்றுத் தேர்தல் நடைபெறுகிறது. அதன் பின்னரே வலதுசாரி கட்சியாகத் தேசிய பேரணி கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்குமா என்பது தெரிய வரும். ஒரு வேலை அவர்களுக்குப் பெரும்பான்மை கிடைத்தால் அவர்கள் பிரதமர் பதவிக்கு உரிமை கோருவார்கள். லு பென்னின் தீவிர ஆதரவாளரான 28 வயதான ஜோர்டான் பார்டெல்லா அங்குப் பிரதமராக வாய்ப்புகள் அதிகம். இடதுசாரிகள் கட்சிகள் 2ஆவது இடத்தை பிடித்துள்ளன. மேலும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்றால் அது மாக்ரோனுக்கு பின்னடைவாகவே இருக்கும். அவரால் விரும்பிய சட்டங்களைக் கொண்டு வர முடியாது.. இந்த தேர்தலால் அவரது அதிபர் பதவிக்கு ஆபத்து இல்லை என்ற போதிலும் இது அவரது அதிகாரங்களை குறைத்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.