சென்னை: செப் 6-
அதிமுகவில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கும் நிலையில் செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி திண்டுக்கல் ஆலோசனையும் நடத்தியுள்ளார். இதற்கிடையே சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை சந்திக்க செங்கோட்டையன் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக அமைதியாக இருந்த அதிமுக சசிகலாவின் கடிதத்திற்குப் பிறகு பரபரப்பில் சிக்கியுள்ளது. ஓபிஎஸ் கட்சியை விட்டு நீக்கப்பட்ட பிறகு எடப்பாடி பழனிசாமி முழுமையாகக் கட்சியை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்.
மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையே கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை அதிமுகவில் வலுத்து வருகிறது.
2019 மக்களவைத் தேர்தல் தொடங்கி தற்போது வரை எடப்பாடி பழனிசாமி தலைமையில் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வியை சந்தித்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையைச் சில முன்னாள் அமைச்சர்கள் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கடந்த சில தினங்களுக்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதினார். 2026 தேர்தல் அதில், திமுகவை வீழ்த்தி 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்றால் தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். மேலும் கட்சி பிளவுபட்டு விடக்கூடாது என்பதற்காகவே தான் இவ்வளவு நாள் அமைதியாக இருந்ததாகவும், இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என சற்று ஆவேசமாகவே அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். சசிகலா கடிதம் எழுதிய அடுத்த நாளே ஜெயலலிதாவின் உதவியாளரான பூங்குன்றனும் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகள் அனைவரையும் ஒன்று சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக திண்டுக்கல் வந்துள்ள எடப்பாடி பழனிசாமி அவசர அவசரமாக நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டியுள்ளார். இதில் திண்டுக்கல் சீனிவாசன், கேபி முனுசாமி உள்ளிட்ட கட்சியின் முக்கிய அமைச்சர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர். தற்போது கிடைத்த தகவலின்படி செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கலாம் எனக் கூறப்படுகிறது.
எப்படியும் எடப்பாடி பழனிசாமி தனக்கு எதிராக திரும்புவார் என ஏற்கனவே உணர்ந்திருந்த செங்கோட்டையன் அடுத்த கட்ட நகர்வுக்கு தயாராகி வருகிறார். தன்னைக் குறித்து எந்த அறிவிப்பு வந்தாலும் உடனடியாக சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை சந்திக்க செங்கோட்டையன் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் பிரிந்து சென்றவர்களை ஒரு அணியாக திரட்டி அதிமுகவுக்கு எதிராக வழக்கு தொடரலாம் எனவும் சொல்லப்படுகிறது.

















