அதிமுகவுக்கு உரிமை கோரும் இபிஎஸ்,ஓபிஎஸ் – கட்சி முடக்கப்படும் அபாயம்

சென்னை,ஜூலை 13- அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி அக்கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பிலும், உண்மையான அதிமுக நாங்கள்தான் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுக்கள் இன்று நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வரவுள்ளன. அதேநேரத்தில் இருவரும் தாங்கள்தான் உண்மையான அதிமுக என்று தேர்தல் ஆணையத்திலும் மனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் அதிமுக இரண்டாக பிளவு பட்டு, எடப்பாடி அதிமுக, பன்னீர்செல்வம் அதிமுக என பிரியும் நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் வானகரத்தில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு  கூட்டத்திற்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி  செய்யப்பட்டது. பொதுக்குழு கூட்டத்திற்கு எதிர்ப்பு  தெரிவித்தும், எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்வு செய்வதை  எதிர்த்தும் ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை  நிலையத்தில் நேற்று முன்தினம் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் குவிந்தனர். அவர்கள் அலுவலகத்துக்குள் செல்லாமல் தடுக்க எடப்பாடி பழனிசாமி தரப்பினரும் குவிந்தனர்.

இருதரப்பும் பின்னர் கடுமையாக  மோதிக்கொண்டனர். இதனால் அந்த பகுதி முழுவதும் போர்க்களமானது.  ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு தொண்டர்கள் கட்சி அலுவலகத்தின் கதவுகளை உடைத்து உள்ளே  நுழைந்தனர். போலீசார் அவர்களை  கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியும் தகராறு முடிவுக்கு வரவில்லை.  இதையடுத்து, சட்டம் ஒழுங்கு பிரச்னை வராமலிருக்க அந்த சாலை முழுவதும் 144  தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், கட்சி அலுவலகத்திற்குள்  இருதரப்பும் சென்று பிரச்னை செய்ததால் கட்சி அலுவலகத்திற்கு வருவாய்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். பின்னர் வருகிற 25ம் தேதி இருவரும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வத்திற்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இருதரப்பினரும் கோட்டாட்சியர் முன்பு ஆஜராகி தங்கள் தரப்பு விளக்கங்களை தெரிவிக்க வேண்டும் என்று அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் அதிமுக  தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிடக் கோரி மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும், அந்த மனுவை அவசர வழக்காக உடனே விசாரிக்க வேண்டும் என்றும் அதிமுக தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ்குமார் முன்பு நேற்று காலை முறையீடு செய்தார்.

இதைக் கேட்ட நீதிபதி சதீஷ்குமார், மனுத்தாக்கல் செய்யும் பட்சத்தில் நாளை(இன்று) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார். இதையடுத்து, நேற்று மதியம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வழக்கறிஞர் ராஜேஷ்வரி, நீதிபதி சதீஸ்குமார் முன்பு ஆஜராகி, வருவாய் கோட்டாட்சியர் உத்தரவை ரத்து செய்து, சீலை அகற்ற உத்தரவிட வேண்டும். நாங்கள் தான் உண்மையான அதிமுக என்று தெரிவித்தார். இந்த முறையீட்டை கேட்ட நீதிபதி சதீஷ்குமார், மனுத்தாக்கல் நடைமுறை முடிந்தால் நாளையே (இன்று) விசாரிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, இரு தரப்பினரும் மனு தாக்கல் செய்வதில் தீவிரம் காட்டினர். தொடர்ந்து மாலையில் இரு தரப்பிலும் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்ப்பட்டன. இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில், அதிமுக தலைமை அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளதால், இரண்டு அணியினரும் கட்சி அலுவலகத்துக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் ஒரு தெளிவான முடிவு அறிவித்தால் மட்டுமே கட்சி யார் கட்டுப்பாட்டில் வரும் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.