அதிமுக பொதுக்குழு வழக்கு இன்று மீண்டும் விசாரணை

புதுடெல்லி, ஜன. 5-
கடந்த ஆண்டு (2022) ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்ற ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து ஆகியோர் மேல்முறையீடு செய்துள்ளனர்.
இந்த மனுக்களை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு பல கட்ட விசாரணைக்கு பிறகு ஜனவரி 4-ந் தேதிக்கு (நேற்று) தள்ளிவைக்கப்பட்டது. இதன்படி மேல்முறையீட்டு மனுக்கள் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘இந்த மனுக்களை விசாரிக்க வேண்டிய அவசியத்தையும், வழக்கு கடந்து வந்த பாதையையும் அறிய விரும்புகிறோம்’ என்று தெரிவித்தனர். மேலும் ‘அடுத்த வாரம் வேறு வழக்குகளை விசாரிக்க வேண்டி உள்ளதால், இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை இந்த வாரத்துக்குள் நிறைவு செய்ய விரும்புகிறோம் என தெரிவித்து விசாரணையை நாளைக்கு (இன்று) தள்ளி வைத்தனர். அதன்படி, அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மதியம் 2 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.