அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் -எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை

சென்னை: ஜனவரி . 9 – பரபரப்பான அரசியல் சூழலில் இன்று காலை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற இருக்கிறது.
இதுகுறித்து அக்கட்சித் தலைமை வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித் தமிழர்’ எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில், தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், 9.1.2024 – செவ்வாய் கிழமை காலை 10.30 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித் தமிழர்’ எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அக்கட்சி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகளை எடுக்கும் என்று கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் மற்றும் மாவட்டச் செயலர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். பாஜக உடனான கூட்டணியில் இருந்து அதிமுக கடந்த ஆண்டு வெளியேறிய நிலையில், அண்மையில் மதுரையில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சி மாநாட்டில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் மக்களவைத் தேர்தலில் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக அறிவித்து உள்ளார். அதிமுக தலைமையில் மாபெரும் கூட்டணியை மக்களவைத் தேர்தலில் அமைப்போம் எனவும் அவர் தெரிவித்து உள்ளார். இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தேர்தல் கூட்டணி குறித்து மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசிக்க உள்ளார். அதேபோன்று தேர்தல் பணிகள் தொடர்பான உத்தரவுகளையும் அவர் மாவட்டச் செயலர்களுக்கு பிறப்பிக்க இருக்கிறார்.