‘அந்த மாதிரி’ பட்டியலில் 40 பிரிட்டன் எம்.பி.க்கள்

லண்டன், நவ. 12- இங்கிலாந்து நாட்டில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சியில் உள்ளது. இதற்கு அடுத்து, நாடாளுமன்றத்தில் அதிக எண்ணிக்கையிலான எம்.பி.க்களை தொழிலாளர் கட்சி கொண்டுள்ளது. இதில் தொழிலாளர் கட்சியின் பெண் எம்.பி.யாக இருப்பவர் சார்லட் நிக்கோல்ஸ். இவர் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியின்போது, ‘அந்த மாதிரி’ நடக்க கூடியவர்களின் ரகசிய பட்டியல் உள்ளது. அந்த நபர்களுடன் தனியாக இருக்க வேண்டாம் என நான் எச்சரிக்கப்பட்டேன் என்று அவர் கூறியுள்ளார். அந்த நபர்கள், அதிகார துஷ்பிரயோகம் அல்லது பாலியல் ரீதியில் தவறாக நடக்க கூடியவர்கள் என எனக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்களிடம் தப்பி தவறி ஏதும் வாங்கி குடித்து விடாதீர்கள் என எனக்கு கூறப்பட்டது. லிப்டில் பயணிக்கும்போது கூட அந்த நபர்களுடன் ஒருபோதும் செல்ல வேண்டாம். என்னை நான் பாதுகாத்து கொள்ள, எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு அவர்களை தவிர்க்க வேண்டும் என என்னிடம் கூறப்பட்டது என நிக்கோல்ஸ் கூறியுள்ளார். அந்த பட்டியலில் உள்ளவர்களின் பெயரை குறிப்பிடாத நிக்கோல்ஸ், அவர்களில் 2 பேர் அமைச்சரவையில் மந்திரிகளாக இருந்தவர்கள் என கூறியுள்ளார். தொடர்ந்து நிக்கோல்ஸ், அவர்கள் யார் என்று நாம் அனைவருக்கும் தெரியும். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. அவர்கள் தொடர்ந்து நம்மை சுற்றி திரிகிறார்கள். அவர்களுடைய வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள்.