அனுமதி இன்றி போர்வல்கள் – 36 வழக்குகள் பதிவு

பெங்களூர், மே 7- நகரில் போர்வெல்களை முறைப்படுத்தும் முயற்சியாக பெங்களூர் குடிநீர் வடிகால் வாரியம் கடந்த 45 நாட்களில் அனுமதியற்ற போர்வெல்களுக்கு எதிராக 36 வழக்குகள் பதிவு செய்துள்ளது. மார்ச் மாதத்தில் நகரில் நிலவிய கடும் குடிநீர் பற்றும் நிலத்தடி தண்ணீர் பற்றாக்குறையின் போது இனி புதிய போர்வெல்கள் தோண்ட வாரியத்தில் முன் அனுமதி கட்டியம் என அறிவித்திருந்தது. இது குறித்து குடிநீர் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் கூறுகையில் இந்த விஷயத்தில் வாரியத்தின் அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட்டு அனுமதி இன்றி போர்வெல் தோண்டுவோருக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அனைத்து பகுதிகளிலும் நாங்களே நேரில் வந்து ஆய்வு செய்வது கடினம் என்பதால் இந்த விஷயத்தில் இத்தகைய முன் அனுமதி இல்லாத போர்வெல்கள் குறித்து பொது மக்களும் முன்வந்து புகார்கள் பதிவு செய்ய வேண்டும்.இத்தகைய புகார்கள் கிடைத்த உடன் சம்மந்தப்பட்ட இடங்களுக்கு வாரிய அதிகாரிகள் நேரில் சென்று போர்வெல் தோண்டும் பணிகளை நிறுத்தி வருகின்றனர். என ராம்பிரசாத் மனோகர் தெரிவித்தார். ஆனால் போர்வெல்கள் தோண்டுவதற்கு தற்போது தடைகள் இருப்பினும் நகரில் பல இடங்களிலும் போர்வெல்கள் தோண்டப்பட்டு வருவதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து வொயிட் பீல்டு பகுதியில் வசிக்கும் சமூக ஆர்வலர் சந்தீப் அநிருத்தன் என்பவர் கூறுகையில் ஆரம்பத்தில் குடிநீர் வாரிய அதிகாரிகள் வந்து பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால் இவை வெறும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மீண்டும் அதே பணிகள் தொடர்கின்றன. தவிர கடந்த இரண்டு வாரங்களாக அனுமதியற்ற போர்வெல்கல் குறித்து பொதுமக்கள் அளித்த புகார்கள் குறித்து வாரியம் எவ்வித தீவிர நடவடிக்கையும் எடுக்க வில்லை என்றார். இதே போல் ஜெ பி நகரை சேர்ந்த ஒருவர் கூறுகையில் இங்கு ஒருவர் வீட்டு மனையில் போர்வெல் தோண்டியிருப்பதுடன் அந்த நீரை டேங்கர்களுக்கு பணத்திற்கு விற்று வருகிறார் என்றார். இது குறித்து புகார் அளிக்க முயற்சித்தபோது எங்களுக்கு சரியான பதில் கிடைக்க வில்லை. இப்படி போர்வெல்கள் தோண்டுவது தண்ணீரை துஷ்ப்ரயோகம் செய்வது மட்டுமின்றி வாகன போக்குவரத்திற்கும் மிகவும் இடைஞ்சல்கள் ஏற்படுகிறது. வீட்டு தேவைக்கென அனுமதி வாங்கும் இந்த போர்வெல் தண்ணீர் ஆரம்பத்தில் கட்டிடம் கட்டுவதற்கும் பின்னர் கட்டிடத்தின் வர்த்தக பணிக்கும் பயன்படுத்தப்படுகிறது. என்றார்.
இதில் வாரிய தலைவரின் வாக்குறுதியை நம்புவதா அல்லது பொது மக்களின் வாக்குப்பதிவை நம்புவதா என்ற குழப்பம் நீடிக்கிறது.