அனுமதி வழங்குவதில் தாமதம்: ஓசூர் எல்லையில் மெத்தனால் லாரிகள் நிறுத்தம்

ஓசூர்: ஜூலை 9- மெத்தனால், எரி சாராயம் மற்றும் மதுபானங்கள், மகாராஷ்டிரா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களிலிருந்து டேங்கர் லாரிகள் மூலம் தமிழகம், புதுச்சேரி, கேரளா மாநிலங்களுக்கு பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படுகின்றன.
ஓசூர் ஜுஜுவாடி வழியாக வரும் இந்த லாரிகள் தமிழகத்துக்குள் செல்ல, கிருஷ்ணகிரி மாவட்ட மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறை அதிகாரிகள் அனுமதி வழங்க வேண் டும்.
விதிமுறைகள் கடைபிடிப்பு: கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராய உயிரிழப்பைத் தொடர்ந்து, மெத்தனால், எரிசாராயம், மது பானங்கள் எடுத்துச் செல்லும் லாரிகளில் உரிய விதிமுறைகள் கடை பிடிப்பதைத் தமிழக அதிகாரிகள் உறுதி செய்து வருகின்றனர். இதனால், மெத்தனால் உள்ளிட்டவை ஏற்றி வரும் டேங்கர் லாரிகளுக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இதனிடையே, மெத்தனால் உள்ளிட்டவை ஏற்றி வந்த 50-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகளுக்கு அனுமதி கிடைப்பதில்தாமதம் ஏற்பட்டதால், கடந்த 5 நாட்களாகக் கர்நாடகா மாநிலம் அத்திப் பள்ளி முதல் தமிழக எல்லையான ஜுஜுவாடி வரை நிறுத்தி வைக் கப்பட்டுள்ளன.
விடுமுறை நாட்கள்: இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட மதுவிலக்கு மற்றும்ஆயத்தீர்வுத் துறை அதிகாரிகள் கூறும்போது, “சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்கள் வந்ததால், மெத்தனால் உள்ளிட்டவை ஏற்றி வந்த லாரிகளுக்குஅனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த லாரிகளுடன் போலீஸார் உடன் செல்ல வேண்டும்.
கடந்த சில நாட்களாகபோலீஸார் பணிக்கு வராததால், இந்த தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்றும் (நேற்று) நாளையும் அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றனர்.