அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டியது அவசியம்: மம்தா பானர்ஜி வலியுறுத்தல்

கொல்கத்தா, டிச. 29- மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் சக்லா நகரில் உள்ள பாபா லோக்நாத் கோயிலுக்கு, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று சென்றார். அங்கு அவர் கூறும்போது, “அனைத்து மதங்களையும் நாம் மதிக்க வேண்டும். உலகில் உள்ள எந்த மதமும் வன்முறையை போதிக்கவில்லை. இரக்க மனப்பான்மையுடன் இருக்க வேண்டும் என்றும் அன்பு மற்றும் சகோதரத்துவத்தை பரப்ப வேண்டும் என்றும் தான் எல்லா மதங்களும் போதிக்கின்றன. தேர்தல் நெருங்கும்போது மட்டும் மதங்களை மதிப்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. தேர்தல் காலத்தில் மதங்களை அரசியலாக்குவதை தவிர்க்க வேண்டும்” என்றார். பின்னர் தேகங்கா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பேசியதாவது: மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பாஜகவுடன் கூட்டு வைத்துக் கொண்டு எங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றனர். வரும் மக்களவைத் தேர்தலில், மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு எதிரான போரில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கும். அதேநேரம் நாடு தழுவிய அளவில் எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி பாஜகவை எதிர்கொள்ளும். பாஜக தனது அரசியல் சுயநலத்துக்காக குடியுரிமை விவகாரத்தை பயன்படுத்துகிறது. இந்த விவகாரத்தில் அக்கட்சி மக்களை தவறாக வழிநடத்துகிறது. முன்னதாக, மாவட்ட ஆட்சியர்கள் குடியுரிமை விவகாரங்களை முடிவு செய்தனர். ஆனால் இப்போது அந்த அதிகாரங்கள் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு குடியுரிமை இல்லை என்றால், அவர்கள் அரசு திட்டங்களையும் சேவைகளையும் எவ்வாறு பெறுவார்கள்? இவ்வாறு அவர் தெரிவித்தார்.