அனைவருக்கும் வீடு திட்டத்தில் 3.61 லட்சம் வீடுகள் கட்ட அனுமதி

புதுடில்லி, நவ. 25- அனைவருக்கும் வீடு எனப்படும் பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ், 17 மாநிங்களில், மேலும், 3.61 லட்சம் வீடுகள் கட்ட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
நாடு முழுதும் வீடில்லாதோருக்கு, 2022ம் ஆண்டுக்குள் வீடி கட்டித் தருவதற்காக, பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், மேலும், 3.61 லட்சம் வீடுகள் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: நாடு முழுதும், 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், 3.61 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு, துறைச் செயலர் துர்கா சங்கர் மிஸ்ரா தலைமையிலான மத்திய அனுமதி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, இந்த திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளின் எண்ணிக்கை, 1.14 கோடியாக உயர்கிறது. இதில், 52.5 லட்சம் வீடுகள் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டு உள்ளன.மொத்தம், 7.52 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த திட்டத்தில், மத்திய அரசின் பங்காக, 1.85 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 1.13 லட்சம் கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுஉள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.