அபுதாபியில் முதல் இந்து கோவில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்

அபுதாபி: பிப்.14- பிஏபிஎஸ் அமைப்பு சார்பில், பல்வேறு வசதிகளுடன் 27 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள சுவாமி நாராயண் கோயிலை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். ஆன்மிகத் தலைவர் மஹந்த் சுவாமி மகராஜ், மத்திய கிழக்கின் முதல் பாரம்பரிய இந்து கோயிலின் திறப்பு விழாவுக்குத் தலைமை தாங்குகிறார். பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளார். பிரதமர் மோடிக்கு ராணுவ மரியாதையுடன் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அஹ்லான் மோடி நிகழ்ச்சியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார். இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையேயான உறவுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் உச்சத்தை எட்டியுள்ளது என்று கூறினார்.
இன்றைய தினம் துபாய்-அபுதாபி ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் முரக்கா பகுதியில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயண்கோவிலை அவர் திறந்து வைக்கிறார். பிஏபிஎஸ் அமைப்பு சார்பில், பல்வேறு வசதிகளுடன் 27 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட சுவாமி நாராயண் கோயில் மற்றும் அதன் வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
கோவிலுக்குள் சென்று கட்டுமானங்களை பார்வையிட்டு அங்கு நடைபெறும் பூஜையிலும் கலந்து கொண்டு வழிபாடு நடத்தவுள்ளார். அபு முரைக்கா பகுதியில் அமைந்துள்ள இக்கோயில் 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இளஞ்சிவப்பு ராஜஸ்தான் மணற்கல் மற்றும் வெள்ளை இத்தாலிய மார்பிள் கல் இந்தியாவில் செதுக்கப்பட்டு பின்னர் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு கொண்டு செல்லப்பட்டது. அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் நன்கொடையாக வழங்கிய 13.5 ஏக்கரில் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அங்கு சென்ற போது நிலத்தை தானமாக வழங்கினார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஏழு அமீரகங்களை குறிக்கும் வகையில், இந்த கோயிலில் ஏழு கோபுரங்கள் உள்ளன.தொடர்ந்து 18ம் தேதி முதல் பக்தர்கள் கோயில் அனுமதிக்கப்பட உள்ளனர். பிரதமராக பதவியேற்ற பிறகு நரேந்திர மோடி, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு செல்வது இது ஏழாவது முறையாகும். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஐக்கிய அரபு அமீரகத்தில் சுமார் 35 லட்சம் இந்திய நாட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதன்மூலம் அந்த நாட்டில் இந்திய நாட்டு மக்கள் மிகப்பெரிய வெளிநாட்டவர் குழுவை உருவாக்கியுள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் சமூக-பொருளாதார மேம்பாட்டுக்காக இந்தியர்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. இந்தியா, ஐக்கிய அரபு அமீரக நாடுகளிடையே வலுவான உறவை வளர்ப்பதில் இந்தியர்கள் முக்கிய பங்கை வகிக்கின்றனர் என்று தெரிவித்துள்ளது.