அபுதாபியில் முதல் இந்து கோயில் பிப்.14ல் திறப்பு

அரபு பிப்ரவரி. 12 – அரசு முறை சுற்றுப்பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு செல்லும் பிரதமர் மோடி , அங்கு அபுதாபி நகரில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயணன் கோயிலை பிப்ரவரி 14 ஆம் தேதி திறந்து வைக்கிறார். அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோயில் இது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்து கோயிலை கட்ட வேண்டும் என்பது அங்கு வசிக்கும் இந்து மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. கடந்த 2015ஆம் ஆண்டு பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சென்ற போது அபுதாபியில் கோயில் கட்ட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
பாப்ஸ் (BAPS) எனப்படும், போச்சசன்வாசி அக்ஷார் புருஷோத்தமன் சுவாமி நாராயண் சன்ஸ்தா கோயில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் கட்டப்பட்டுள்ளது. குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 7 அமீரகங்களை குறிக்கும் வகையில் 7 கோபுரங்கள் இந்த கோயிலில் அமைக்கப்பட்டுள்ளன. பழமையான முறையை பின்பற்றி அதாவது கோயில் கட்டுமான பணியில் இரும்பு மற்றும் எஃகு ஆகியவை பயன்படுத்தப்படவில்லை. முற்றிலும் கற்களை கொண்டே கோயில் எழுப்பப்பட்டுள்ளது. இதற்காக 20,000 டன் கற்கள் 700 கண்டெய்னர்களில் அபுதாபிக்கு கொண்டு செல்லப்பட்டன. கான்கிரீட் கலவையில் 55% சிமெண்டுக்கு பதில், Fly Ash பயன்படுத்தி அடித்தளத்தை நிரப்பியுள்ளனர். 300க்கும் மேற்பட்ட சென்சார்கள் பொறுத்தி அழுத்தம் வெப்பநிலை, அதிர்வுகளை தாங்குகிறதா என கண்காணித்துள்ளனர். கோயிலின் வெளிப்புறம் ராஜஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்ட பிங்க் நிற மணற்கற்களால் கட்டப்பட்டுள்ளது கோயிலின் உட்புறம் வெள்ளை மார்பிள் கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இது தவிர 2,000 கலைஞர்களை கொண்டு கைகளாலேயே மயில், யானை, குதிடை, ஒட்டகங்கள் செதுக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது எப்போது முதல் வழிபாடு: பிரதமர் மோடி வரும் 14ஆம் தேதி பாப்ஸ் கோயிலை திறந்து வைக்கிறார். மார்ச் 1ஆம் தேதி முதல் மக்கள் வழிபாடு செய்ய உள்ளனர். பார்வையாளர்கள் மையம், பிரார்த்தனை மண்டபம், கண்காட்சி, கற்றல் பகுதி, குழந்தைகளுக்கான விளையாட்டு இடம் மற்றும் கடைகள் கோயிலினுள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து தரப்பு மக்களும் வந்து அமைதியான அனுபவத்தை பெற்று இந்து கலாசாராத்தை புரிந்து கொள்ளும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது என வடிவமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.