அப்தாப் என்னை துண்டுகளாக வெட்டுவான் 2 ஆண்டுக்கு முன்பே புகார் அளித்த ஷ்ரத்தா

புதுடெல்லி: நவ. 24 –
டெல்லியில் லிவிங் டுகெதர் முறையில் குடும்பம் நடத்தி வந்த ஷ்ரத்தா வாக்கர் (28), என்ற பெண், காதலன் அப்தாப்பால் 35 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவம் மே மாதம் நிகழ்ந்துள்ளது. காதலியின் உடலை 35 துண்டுகளாக வெட்டி கூறுபோட்டுள்ளார். இதன்பின்னர், அவற்றை டெல்லியின் பல பகுதிகளில் வீசி சென்றுள்ளார். இந்த வழக்கில் போலீசார் அப்தாப்பை கடந்த 12-ம் தேதி கைது செய்து காவலில் எடுத்துள்ளது. இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்பே அவன் கொலை செய்வான் என்றும், பல துண்டுகளாக வெட்டுவான் என்றும் ஷ்ரத்தா வாக்கர் போலீசில் புகார் அளித்துள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 23-ம் தேதி மகாராஷ்டிராவின் நலசோப்ரா நகரில் துலிஞ்ச் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் வாக்கர் புகார் அளித்திருக்கிறார். அந்தப் புகாரில், அவன் இன்று என்னை மூச்சு திணறச்செய்து கொல்ல முயன்றான். என்னை பயமுறுத்துவதோடு, கொலை செய்து, பல துண்டுகளாக வீசி விடுவேன் என்று மிரட்டலும் விடுக்கிறான். 6 மாதங்களாக இது தொடருகிறது. என்னை தாக்கிக்கொண்டே இருக்கிறான். ஆனால், எனக்கு போலீசாரிடம் செல்ல தைரியம் இல்லை. ஏனெனில், என்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டக்கூடும் என தெரிவித்துள்ளார். மேலும், அந்த புகாரில் அப்தாப்பின் பெற்றோருக்கும் கூட நாங்கள் ஒன்றாக வாழ்கிறோம் என தெரியும். என்னை தாக்குவதும், கொலை செய்ய முயற்சிப்பதும் கூட அவர்களுக்கு தெரியும் என்று தெரிவித்துள்ளார்.