அமலாக்கத்துறைக்கு டெல்லி முதல்வர் கடிதம்

புதுடெல்லி:டிச. 22- டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் புதிய சம்மன் அரசியல் உள்நோக்கம் கொண்டது என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் குற்றம்சாட்டி உள்ளார். டெல்லி புதிய மதுபானகொள்கை வழக்கில் டெல்லி துணைமுதல்வராக பதவி வகித்த மணீஷ் சிசோடியா மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு கடந்த நவம்பர் 2ம் தேதி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் ஆஜராகவில்லை. இதையடுத்து நேற்று விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியது. ஆனால் ஏற்கனவே திட்டமிட்டபடி 10 நாள் விபாசனா தியான பயிற்சிக்கு சென்றதால் ஆஜராகவில்லை. இந்நிலையில் அமலாக்கத்துறைக்கு கெஜ்ரிவால் எழுதியுள்ள கடிதத்தில், “நான் டெல்லி முதல்வராகவா அல்லது ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளராக அழைக்கப்பட்டுள்ளேனா? சாட்சியாகவா அல்லது சந்தேகத்தின் பேரில் அழைக்கப்பட்டுள்ளேனா? என்பது சம்மனில் குறிப்பிடப்படவில்லை.நான் சட்டத்தை மதிக்கும் மனசாட்சியுள்ள ஒரு சாதாரண குடிமகன். எனது வாழ்க்கை வௌிப்படைத்தன்மையானது, நேர்மையானது. சட்டத்துக்கு இணங்க அனுப்பப்படும் எந்தவொரு சம்மனையும் எதிர்கொள்ள நான் தவற மாட்டேன். ஆனால் இந்த வழக்கில் என் மீதான குற்றச்சாட்டு அரசியல் உள்நோக்கம் கொண்டது. எதிர்க்கட்சிகளின் குரலை அடக்க நினைக்கும் அரசியல் சூழ்ச்சியாளர்களின் உத்தரவுப்படி அனுப்பப்பட்டுள்ளது” என்று குற்றம்சாட்டி உள்ளார்.