அமலாக்கத்துறை முன் ஜார்க்கண்ட் முதல்வர் ஆஜர்

ராஞ்சி, நவ. 18- ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல் மந்திரி ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிற து. அங்கு சட்டவிரோதமாக ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்து ஊழல் அரங்கேறி இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. முதல் கட்டமாக முதல் மந்திரி ஹேமந்த் சோரனின் அரசியல் உதவியாளர் பங்கஜ் மிஸ்ரா, பச்சுயாதவ், பிரேம் பிரகாஷ் ஆகிய 3 பேரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இந்த வழக்கில், முதல் மந்திரி ஹேமந்த் சோரன் கடந்த 3-ம் தேதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அவர் அவகாசம் கேட்டதைத் தொடர்ந்து விசாரணை தேதி 17-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநில முதல் மந்திரி ஹேமந்த் சோரன் ராஞ்சியில் உள்ள அமலாக்கத்துறை பிராந்திய அலுவலகத்தில் நேற்று விசாரணைக்காக நேரில் ஆஜரானார்.