அமலாக்கத் துறை சோதனை

கொல்கத்தா:மார்ச் 9: மேற்கு வங்கத்தில் ஆசிரியர்கள் பணி நியமனத்தில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக சிபிஐ,அமலாக்கத் துறை ஆகியவை தனித்தனியே வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த முறைகேட்டில் முன்னாள் கல்வி அமைச்சர் பார்த்தாசாட்டர்ஜி கைது செய்யப்பட்டார்.
ஊழல் தொடர்பான சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் கொல்கத்தா உட்பட பலபகுதிகளில் அமலாக்கத் துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.இதில், கொல்கத்தாவை ஒட்டிய நியூடவுன் பகுதியில் முன்னாள் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜிக்கு நெருக்கமான ஒப்பந்த ஆசிரியர் ஒருவரின் வீட்டில் 5 அதிகாரிகள் கொண்ட குழு சோதனை நடத்தியது.
வடக்கு கொல்கத்தாவில் நாகர்பஜார் பகுதியில் கணக்காளர் ஒருவரின் வீட்டிலும் ஒரு குழு சோதனை நடத்தியது. மேலும் கொல்கத்தாவின் ரஜர்ஹத் பகுதியில் சில தொழிலதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் இடைத்தரகர்களின் வீடுகளில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.