அமித்ஷா கருத்துக்கு முதல்வர் சித்தராமையா பதில்

பெங்களூரு, மே 2: கர்நாடகாவின் ஹாசன் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மீது தொடரப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக பெண்கள் சார்பில் இறுதியாக பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் சித்தராமையா நன்றி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளதாவது:
‘இந்த விவகாரத்தில் உங்கள் வார்த்தைகள் நம்பிக்கையை ஏற்படுத்தினால்,
கடந்த சில சம்பவங்களில் உங்கள் நடத்தை மற்றும் வார்த்தைகள் மலிவானவை என்பதைக் காட்டுகிறது.
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்களை உங்கள் சொந்தக் கட்சியைச் சேர்ந்த எம்.பி பாலியல் வன்கொடுமை செய்தபோது நீங்கள் யாருக்காக நின்றீர்கள் என்பதனை மறக்கமுடியாது. பெண்கள் விளையாட்டு வீராங்கனைகள் டெல்லியில் வாரக்கணக்கில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியும் நீங்கள் கண்டு கொள்ளவில்லை. அவற்றையெல்லாம் எப்படி மறக்க முடியும்.
பல்கிஸ் பானோ வழக்கில் தண்டனை பெற்றவர்களை ஆளும் குஜராத் அரசு மாலை அணிவித்து விடுதலை செய்ததை எப்படி மறக்க முடியும்.
இதில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு குற்றவாளிகளை மீண்டும் சிறைக்கு அனுப்பியது. உன்னாவ் தலித் சிறுமி பலாத்கார வழக்கில் குற்றவாளிகளுக்குப் பின்னால் உங்கள் கட்சி நின்றதை எப்படி மறக்க முடியும். ஹத்ராஸ் வழக்கில் கற்பழிப்பாளர்களுக்குப் பின்னால் உங்கள் கட்சி நின்றதை எப்படி மறக்க முடியும்.
மணிப்பூரில் பெண்கள் நிர்வாணமாக ஊர்வலம் சென்றபோது பாராமுகமாக இருந்த பாஜகவை மறக்க முடியுமா. இந்த உண்மைகள் அனைத்தும் நாட்டில் உள்ள‌ பெண்களுக்குத் தெரியும். நீங்கள் விழித்துக்கொண்டு யதார்த்தத்தை உணர வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அமித்ஷாவிடம் சித்தராமையா கேட்டுக் கொண்டார்.