அமித் ஷா, ஜே.பி. நட்டா வருகை

புதுடெல்லி செப்டம்பர் 9- பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு புதுவை பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவடே, தேசிய செயலாளர் சத்திய குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய். ஜெ.சரவணன்குமார் செல்வகணபதி எம்.பி. உள்பட பலர் கலந்துகொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களான வினோத் தாவடே, சத்தியகுமார் ஆகியோர் பேசும்போது அனைத்து தொகுதிகளிலும் கிளைகளை வலிமைப்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கினார்கள்.
வருகிற நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் உள்துறை மந்திரி அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் புதுச்சேரிக்கு வர உள்ளதாகவும் தெரிவித்தனர். பா.ஜனதாவின் தேசிய தலைமையானது பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த தேர்தலில் பா.ஜனதா கூட்டணி அல்லாத கட்சிகள் ஜெயித்த தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் அந்த தொகுதிகளை கைப்பற்ற குறிவைத்து காய்களை நகர்த்தி வருகிறது.
புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி உள்ள நிலையில் புதுவை எம்.பி. தொகுதியை கைப்பற்றியே தீரவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.
ஏற்கனவே, மத்திய மந்திரி எல்.முருகனை பொறுப்பாளராக நியமித்து பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. அவரும் அவ்வப்போது புதுச்சேரி வந்து கூட்டங்களை நடத்துவது, பொதுமக்களை சந்தித்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.