அமித் ஷா பற்றி அவதூறு பேச்சு: ராகுலுக்கு உ.பி. நீதிமன்றம் சம்மன்

சுல்தான்பூர், டிச. 17- மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து ஆட்சேபகரமான வகையில் பேசியது தொடர்பான வழக்கில் ராகுல் காந்திக்கு உத்தரபிரதேச நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ம் தேதி உ.பி.யில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் பேசும்போது,
‘‘பாஜக நேர்மையான அரசியலை முன்னெடுத்து வருவதாகக் கூறும் அக்கட்சியின் தலைவர் (அப்போதைய தலைவர் அமித் ஷா) மீது, கொலைக் குற்றச்சாட்டு வழக்கு பதிவாகி இருக்கிறது’’ என்றார். இதையடுத்து, சுல்தான்பூரைச் சேர்ந்த பாஜக தலைவர் விஜய் மிஸ்ரா, எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தார்.அதில், அமித் ஷா குறித்து அவதூறாக பேசிய ராகுல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனகூறியுள்ளார். இந்த வழக்கில் கடந்த நவம்பர் 18-ம் தேதி வாதம் நிறைவுற்றது. நவம்பர் 27-ம் தேதிக்கு வழக்கை நீதிபதியோகேஷ் யாதவ் ஒத்திவைத்தார்.
அன்றைய தினத்தில் ராகுல் ஆஜராகாததால் நேற்றுஆஜராகுமாறு ராகுல் காந்திக்கு, நீதிமன்றம் மீண்டும் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் நேற்றும் ராகுல் காந்தி ஆஜராகவில்லை. இதையடுத்து வரும் ஜன. 6-ல் ராகுல் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் மீண் டும் சம்மன் அனுப்பியுள்ளது.