அமீரக துணை அதிபர் உடலில் கொரோனா தடுப்பூசி செலுத்தி பரிசோதனை

துபாய், நவ. 4-
அமீரகத்தில் இந்த ஆண்டில் கடந்த ஜூலை மாதம் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டுதலில் அபுதாபி மற்றும் அல் அய்ன் பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் தன்னார்வலர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து அளித்து சோதனை செய்யும் திட்டம் முதலில் தொடங்கியது. அமீரகத்தில் உள்ள தனியார் மருத்துவ தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆதரவில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது
இந்த தடுப்பூசி பரிசோதனை திட்டம் தொடங்கப்பட்டு 31 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுக்கு உடலில் செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அமீரகத்தில் பரிசோதனை செய்யப்படும் கொரோனா தடுப்பூசி மருந்து ஏற்கனவே சீனாவின் வுகான் நகரத்தில் உள்ள சைனா நேசனல் பயோடெக் குழுமத்தின் சார்பில் வெற்றிகரமாக 2 கட்டமாக பரிசோதனை செய்யப்பட்டது.
அடுத்தபடியாக 3-வது கட்ட பரிசோதனை அமீரகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள், அமீரக மந்திரிகள் உள்பட பலருக்கு தடுப்பூசி உடலில் செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்கள் 42 நாட்களில் 17 முறை மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.
சோதனை முயற்சியில் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டவர்களின் ரத்த மாதிரி முடிவுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று துபாயில் உள்ள சுகாதார மையத்திற்கு வருகை புரிந்த அமீரக துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூமிற்கு கொரோனா தடுப்பூசி மருந்து உடலில் செலுத்தப்பட்டது. முன்னதாக அவர் மருத்துவ நிபுணர்களிடம் அந்த மருந்தினை குறித்து கேட்டறிந்தார்.