அமீர் வீட்டில் சோதனை

சென்னை: ஏப். 10: போதைப் பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பாக ஜாபர் சாதிக், இயக்குநர் அமீரின் வீடுகள், ஓட்டல் அதிபரின் அலுவலகம் உட்பட சென்னையில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப் படுகிறது.உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தி ரூ.2,000 கோடி வரை வருமானம் ஈட்டிய குற்றச்சாட்டில் தமிழகத்தை சேர்ந்த 3 பேரை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு (என்சிபி) போலீஸார் டெல்லியில் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி கைது செய்தனர்.
இதற்கு மூளையாக செயல்பட்டது சினிமா தயாரிப்பாளரும், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த நிலையில், திமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்டார். தலைமறைவாக இருந்த ஜாபர் சாதிக் கடந்த மார்ச் 9-ம் தேதி டெல்லியில் கைது செய்யப்பட்டார்.
அவரை டெல்லி என்சிபி போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தனர். சென்னைக்கு அழைத்து வந்தும் விசாரணை நடத்தினர். பின்னர், மீண்டும்டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரது வாக்குமூலம் மற்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில், அவரது நண்பரும், தமிழ்திரைப்பட இயக்குநருமான அமீருக்கு சம்மன் அளிக்கப்பட்டது. அதன்படி, டெல்லி ஆர்.கே.புரம் 1-வது செக்டரில் உள்ள என்சிபி தலைமை அலுவலகத்தில் அமீர் கடந்த 2-ம் தேதி ஆஜரானார். அவரிடம் 12 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நீடித்தது. அவர் அளித்த பதில்கள் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் சென்னை திரும்பினார்.
தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றுஅதிகாரிகள் ஏற்கெனவே கூறியிருந்தனர். இந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கான வங்கி பரிவர்த்தனை, வாங்கப்பட்ட சொத்து விவரங்கள் தொடர்பான ஆவணங்களுடன் டெல்லியில் உள்ள என்சிபி அலுவலகத்தில் கடந்த 5-ம் தேதி ஆஜராகுமாறு அமீருக்கு என்சிபி போலீஸார் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர். ஜாபர் சாதிக் உடன் தொழில் ரீதியில் கூட்டாளியாக இணைந்தது எப்படி என்ற விவரத்தையும் அமீரிடம் என்சிபி போலீஸார் கேட்டுள்ளனர்.